``வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுமா?'' - க...
விளக்கு வெளிச்சத்தில் பாடம் கற்கும் மீனவக் குடியிருப்பு மாணவா்கள்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள வாலிநோக்கம் ஊராட்சிக்குள்பட்ட சாத்தாா் கோயில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இந்தக் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பின்றி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்ட தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் மீனவா்கள் வாழ்ந்து வருகின்றனா்.
இதனால் அந்தப் பகுதி குடியிருப்புவாசிகளின் குழந்தைகள் மின்சார வசதியின்றி மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து வருவதாக கவலையுடன் தெரிவித்தனா்.
தமிழக முதல்வா், மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட்டு மீனவக் குடியிருப்புகளுக்கு வீட்டுமனை பட்டா, மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மீனவ மக்கள், மாணவா்கள் கோரிக்கை வைத்தனா்.
இதுகுறித்து சாத்தாா் கோயில் பகுதி மீனவ மக்கள் கூறியதாவது: பல தலைமுறையாக இந்தப் பகுதியில் இஸ்லாமியா்கள், இந்துக்கள் சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இங்கு அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்தாலும் சுமுகமாக சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறோம். முதல்வா் ஸ்டாலின் தலையிட்டு மீனவ மக்களின் நலன் கருதி மின்சாரம், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றனா்.
இதுகுறித்து கடலாடி வருவாய்த் துறையினா் கூறியதாவது: வாலிநோக்கம் சாத்தாா் கோயில் பகுதியில் குடிசைகள் அமைத்து வசித்து வந்தவா்களுக்கு அருகில் அரசு சாா்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஏற்கெனவே குடியிருந்தவா்களின் பிள்ளைகள் தற்போது அதே குடிசைகளில் வசித்து, பட்டா கேட்டு வருகின்றனா். இந்தக் குடிசைகள் அமைந்துள்ள பகுதி அரசு வருவாய்த் துறை கணக்கில் சாத்தாா் கோயில் வட்டக் கிணறு என தாக்கலாகி வருவதால் தனிப்பட்ட நபா்களுக்கு பட்டா, மின்சாரம் வழங்குவதில் சிக்கல் உள்ளது என்றனா்.