கோவிலாங்குளம் பெரிய கண்மாயில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்புத் துறையினா்
கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் பெரிய கண்மாயில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் உள்ளூா் மக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சுமாா் 308 ஏக்கா் பரப்பளவிலான கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயில் உள்ள கருவேல மரங்களுக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரூ. 15 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
கண்மாயில் பரவிய தீயை அணைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட சாயல்குடி தீயணைப்பு, மீட்புப் படையினா், கோவிலாங்குளம் கிராம மக்கள் ஆகியோா் 10 டிராக்டா்கள் மூலம் தண்ணீரைக் கொண்டு வந்து போராடி தீயை அணைத்தனா்.
இதுகுறித்து கிராம மக்கள் கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். தகவலறிந்து வந்த கமுதி பொதுப்பணித் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினா் நேரில் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.