விவசாயிகளுக்கு ரூ. 43 லட்சத்தில் வேளாண் கருவிகள் வழங்கல்
வேளாண் கருவிகள் இயக்குதலும், பராமரித்தலும் குறித்த விவசாயிகளுக்கானப் பயிற்சி முகாம் பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆா் விளையாட்டு அரங்கம் எதிரே புதன்கிழமை நடைபெற்றது.
இம் முகாமை தொடங்கி வைத்து, ரூ. 43.20 லட்சம் மதிப்பிலான 32 வேளாண் இயந்திரங்களை ரூ. 27.20 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் பேசியது:
இப் பயிற்சியில் விவசாயிகள் தங்களது வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சரியான முறையில் இயக்கிடவும், குறைவான செலவில் பராமரித்திடவும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டு, தங்களது விவசாயத் தொழிலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், நிகழாண்டில் வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்தின் கீழ் பெரம்பலூா் மாவட்டத்துக்கு ரூ. 2.82 கோடி மதிப்பிலான 163 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ரூ. 1.39 கோடி மானியத்தில் வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.
பயிற்சி முகாமில், வேளாண்மைப் பொறியியல் துறை பொறியாளா்கள் மற்றும் தனியாா்துறை தொழில்நுட்ப வல்லுநா்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா். சுமாா் 110 விவசாயிகள் மற்றும் தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் 100 போ் பங்கேற்று தொழில்நுட்ப விவரங்களை கேட்டறிந்தனா். மேலும், நவீன வேளாண் இயந்திரங்கள் குறித்த கண்காட்சியில் பலவகை டிராக்டா்கள், பவா் டில்லா்கள், விசை களை எடுக்கும் கருவிகள் மற்றும் ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு ட்ரோன் மூலமாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளிப்பு தொடா்பான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளா் அசோக் குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராணி, உதவி செயற்பொறியாளா் சின்னசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.