செய்திகள் :

விவாகரத்து செய்யலாம், ஆனால்..! தலைவன் தலைவி - திரை விமர்சனம்!

post image

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தலைவன் தலைவி! ஒரு நகைச்சுவை மற்றும் குடும்ப படத்திற்கான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

மிகுந்த பரபரப்புகள் இல்லாமலிருந்தாலும், படத்தின் டிரைலரும், லேல்லேல்லே… என அந்தப் பாடலும் சிலருக்கு தலையில் ஓடிக்கொண்டே இருந்தன. அதனடிப்படையில், வழக்கமாக ஒரு ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’யை எப்போதும் தந்துவிடும் பாண்டிராஜ் இந்தமுறை என்ன செய்துள்ளார் என்ற ஆர்வத்திலேயே படத்திற்குச் சென்றேன்! 

தலைவன் தலைவி திரைப்படத்தின் ஒரு காட்சி

படத்தின் ஒன் லைன் என்னவென்றால், ஒரு MA படித்த பெண்ணுக்கும், பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெறாத ஒரு பரோட்டா மாஸ்டருக்கும் கல்யாணம் ஆகிறது. ஆனால் அந்த உறவுக்குள் கணவன் மனைவியைத் தாண்டி இரண்டு பேர் தலையிடுகிறார்கள். பையனின் அம்மா, பெண்ணின் அம்மா! இந்த இருவரின் அதிக தலையீட்டாலும், தாக்கத்தாலும் அவர்களுக்குள் அதிகமாக சண்டைகள் வருகின்றன. இந்த சண்டைகளையும், தேவையற்றவர்களின் தலையீடுகளையும், தாண்டி இந்த உறவு, காதல் திளைத்ததா அல்லது முறிந்ததா என்பதைக் காமெடி கலந்து ஒரு Lighthearted படமாகக் கொடுத்திருக்கிறார் நம் இயக்குநர் பாண்டிராஜ். 

இப்போது சமீப கால படங்கள் எல்லாமுமே ஏதோ ஒரு குறையை வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதில் தவறில்லை. அது பார்வையாளர்களைத் தொந்தரவு செய்யும் வகையில் இருப்பதுதான் பல படங்களுக்குப் பிரச்னையாக மாறிவிடுகிறது. அப்படிப் பார்க்கையில் இந்தப் படத்தில் எளிமையான கதைக்களத்தை எடுத்து, எந்த குழப்பமும் இல்லாமல், பதட்டமும் பரபரப்பும் இல்லாமல், முடிந்தவரை இயல்பாக கதையை நகர்த்தி பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறார்கள் இந்தத் தலைவனும் தலைவியும். 

தலைவன் தலைவி திரைப்படத்தின் ஒரு காட்சி

முதலில், படத்தின் முக்கிய புள்ளிகளான விஜய் சேதுபதியும், நித்யாமேனனும் நடிப்பில் எப்படி எனச் சொல்லத்தேவையில்லை. படத்தில் சொல்வதுபோலவே நித்யா மேனன் (நடிப்பில்) Double MA முடித்தவர்தான் என்பதையும், விஜய்சேதுபதி (நடிப்பில்) மாஸ்டர் என்பதையும் இருவரும் இந்தப் படத்தில் அழகாக நிரூபித்துள்ளனர். நகைச்சுவைக் காட்சிகளில் நம்மைச் சிரிக்கவைப்பதாயினும் சரி, சோகக்காட்சிகளில் நம்மைக் கலங்கவைப்பதாக இருந்தாலும் சரி, இருவரும் சிறப்பாகத் தங்களது வேலையைச் செய்துள்ளனர். அவர்களின் காம்போவே இந்தப் படத்திற்கு நல்லதொரு பலம்! 

அடுத்ததாக, முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும், தீபா சங்கர், செம்பன் வினோத், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன், சென்ட்ராயன், நந்தினி, சரவணன், ஜானகி சுரேஷ் உள்ளிட்ட அனைவரையுமே கதையில் கச்சிதமாகவும், இயல்பாகவும் பொருந்தவைத்து அவர்களை அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர். அவர்களும் தங்களுடைய பங்குகளைக் கச்சிதமாகச் செய்து, நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள். 

தலைவன் தலைவி திரைப்படத்தின் ஒரு காட்சி

புகுந்த வீட்டில் ஹீரோயினுக்கு குடைச்சல் கொடுக்கும் கதாபாத்திரங்களாக தீபாவும், ரோஷினியும் சிறப்பாக நடித்துள்ளனர். முக்கியமாக தீபாவின் நடிப்பு பாராட்டுக்குரியது. ரோஷினியும் வரிசையாக பல நல்ல படங்களில் தோன்றி தனது திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்திலும் அந்த வாய்ப்பை அவர் தவறவிடவில்லை.  

முக்கியமாக திருடனாக வரும் யோகி பாபு முதல்காட்சியிலிருந்து கடைசி வரை நம் கூடவே நகர்ந்து நம்மைச் சிரிக்கவைக்கத் தவறவில்லை. அவரது பல நகைச்சுவைகள் திரையரங்கைச் சிரிக்கவைத்து சிறப்பு செய்துள்ளன.

தலைவன் தலைவி திரைப்படத்தில் யோகி பாபு

ஹோட்டல் நடத்தும் குடும்பத்துடனும், திருடுவதற்கு கடவுளிடம் அனுமதி வாங்குவதும், அவரைத் துரத்தும் காவல்துறையும் என படம் முழுக்க அவருக்கு நீண்ட கதாபாத்திரம் கொடுத்திருப்பது படத்திற்கு இன்னொரு பலம்! அவருடன், பாபா பாஸ்கர், செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்டோரும் நகைச்சுவைப் பட்டாளத்தில் சேர்ந்துகொள்கின்றனர்.  

அடுத்ததாக இயக்குநர் மற்றும் எழுத்தாளர் பாண்டிராஜ். பசங்க, கடைக்குட்டி சிங்கம் போன்ற இவரின் படங்களை இன்றும் டிவியில் கண்டுகளிக்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர். நடுவில் சற்று தடம் மாறி சில முயற்சிகள் செய்தாலும் இந்தப் படத்தில் தனது பலத்தால் வெற்றி பெற்றுள்ளார். கணவன் மனைவி உறவைப் போராடியாவது காப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும், மற்றவர்களின் தலையீடு எவ்வளவு ஆபத்தானது என்பதையும் நகைச்சுவையுடன் நன்றாக அமைத்து திரையில் கொடுத்துள்ளார் பாண்டிராஜ். முக்கியமாக படத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் அனைத்துமே அழகாக இருந்தது கவனிக்கவைத்தது.

தலைவன் தலைவி திரைப்படத்தில் நடிகை தீபா

அந்தப் பெயர்கள் வைத்தது மட்டுமின்றி அவர்களுக்கான இடமும், முக்கியத்துவமும் ஒன்றிரண்டு இடங்களில் கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும், எந்த ஒரு திணிப்பும் இல்லாமல் முடிந்தவரை இயல்பாகத் தந்திருக்கிறார். ஆகாச வீரன் எனும் கதாபாத்திரமும், பேரரசி எனும் கதாபாத்திரமும் கொஞ்சம் ஓவராகக் காதலிப்பதாகத் தோன்றலாம், சில சண்டைகள் கூட தேவையில்லாததாகத் தோன்றலாம், ஆனால் அந்த எண்ணங்களை நகைச்சுவைக் காட்சிகளாலும், தேர்ந்த திரைக்கதையாலும் நம்மைக் கவனிக்கவிடாமல் தடுத்துவிடுகிறார். 

எம். சுகுமாரின் ஒளிப்பதிவு சண்டைக்காட்சிகளிலும் காதல்காட்சிகளிலும் நல்லமுறையில் கைகொடுத்துள்ளன. சந்தோஷ் நாராயணன் பாடல்களும் படத்தை மெருகேற்ற உதவியுள்ளன. தீம் மியூசிக்கிலும் சரி, பாடல்களிலும் சரி தன் வேலையைச் சிறப்பாக செய்துமுடித்துள்ளார். அதிலும் அந்த லேல்லேல்லே என இருவரும் கொஞ்சிக்கொள்ளும் காட்சிகளில் நம்மையும் தாளம்போட வைக்கிறார் சநா. 

தலைவன் தலைவி திரைப்படத்தின் ஒரு காட்சி

மொத்தமாகப் பார்க்கையில் இந்தப் படம் கண்டிப்பாகக் குடும்பங்களுடன் சென்று சிரித்து, மகிழ்ந்துவிட்டு வருவதற்கான எல்லா விஷியங்களையும் கொண்டுள்ளது எனக் கண்டிப்பாகச் சொல்லலாம். முக்கியமாகப் புதுக் காதலர்களும்கூட பார்க்கலாம். 

இதையும் படிக்க... வடிவேலு, ஃபஹத் ஃபாசில்! யார் மாயமான்? மாரீசன் - திரை விமர்சனம்!

கேலிகளைத் தாண்டி வென்றாரா சூர்யா சேதுபதி? பீனிக்ஸ் திரை விமர்சனம்

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் வெளியாகியுள்ள பீனிக்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது? ஆரம்பத்திலிருந்தே அறிமுக நாயகனான சூர்யா மீது சம... மேலும் பார்க்க