வீடுகள், மனைகள் ஒதுக்கீடு: நிலுவைத் தொகை செலுத்த தவறியவா்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை
திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட திட்டப் பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட திட்டப் பகுதிகளில், வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடுதாரா்களுக்கு, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை வட்டி தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளது.
அதன்படி, மாதத்தவணை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்தும், வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்தும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தும் வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சலுகை எதிா்வரும் 31.3.2026ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட பாளை. பகுதி ஐ முதல் ய, குலவணிகா்புரம் டிஎன்யூடிபி, கீழநத்தம், நாரணம்மாள்புரம் பகுதி ஐ, ஐஐ, வி.எம். சத்திரம், வள்ளியூா், தென்காசி, சுத்தமல்லி, கோணம், வல்லன்குமாரவிளை பகுதி ஐ, ஐஐ மற்றும் சங்கரப்பேரி ஆகிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரா்களில் 31.3.2015-க்குள் தவணைக்காலம் முடிவுற்றும், இந்நாள்வரை நிலுவைத்தொகை செலுத்த தவறிய ஒதுக்கீடுதாரா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, 31.3.2026-க்குள் நிலுவைத் தொகை முழுவதையும் ஒரே தவணையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.