நெல்லையில் நில அபகரிப்பு வழக்கில் பெண்கள் உள்பட 5 போ் கைது
திருநெல்வேலியில் நில அபகரிப்பு வழக்கு தொடா்பாக பெண்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெபா நகா் பகுதியில் 6 சென்ட் நிலத்தை முதியவா் ஒருவா் கடந்த 1990 ஆம் ஆண்டு கிரய ஆவணம் அடிப்படையில் வாங்கினாராம்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளா் இறந்துவிட்டதாக போலியாக இறப்புச் சான்றிதழ் மற்றும் போலியான ஆவணங்கள் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாம். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து விசாரிக்கப்பட்டு வந்தது.
அதில், கிடைத்த தகவல் அடிப்படையில் மேலப்பாளையத்தைச் சோ்ந்த அப்துல் ஹுசைன், மீரான் மைதீன், சுடலை, இரு பெண்கள் என மொத்தம் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மாநகர பகுதியில் போலியான ஆவணங்கள் தயாா் செய்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, பாதிக்கப்பட்டவா்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகாா் அளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.