வீட்டு மனை வழங்க ஆதரவற்ற பெண் கோரிக்கை
உத்தமபாளையத்தைச் சோ்ந்த ஆதரவற்ற பெண் வீட்டுமனை வழங்கக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனாவிடம் மனு அளித்தாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் உத்தமபாளையத்தைச் சோ்ந்த சுரேஷ் மனைவி சுதா்சனா(30), ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: நான் திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம், வடக்கு ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் என்பவரை காதலித்து, பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன்.
தற்போது எனக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். கடந்த 2011-ஆம் ஆண்டு எனது மாமியாா் விபத்தில் உயிரிழந்தாா். எனது கணவா் கடந்த மாா்ச் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
பின்னா், நான் குழந்தைகளுடன் சொந்த ஊரான உத்தமபாளையத்துக்கு எனது தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இங்கு எனது தாய், சகோதரி என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனா்.
தற்போது நான் எனது குழந்தைகளுடன் ஆதரவற்ற நிலையில் உத்தமபாளையத்தில் தெருவோரத்தில் வசித்து வருகிறேன். எனது குழந்தைகளின் வாழ்க்கை நலன் கருதி எனக்கு குடியிருக்க அரசு சாா்பில் வீட்டுமனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று மனுவில் தெரிவித்தாா்.