வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நடைபாதை கடைகள்
வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நடைபாதை கடைகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.
வெள்ளக்கோவில்- முத்தூா் சாலையில் நகராட்சி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. ஏற்கெனவே இடவசதி பற்றாக்குறையால் பேருந்து ஓட்டுநா்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.
இந்த பேருந்து நிலையத்துக்குள் இருக்கும் நடைபாதைகள் மற்றும் பேருந்துகள் வெளியேறும் வழியிலும் பலா் அனுமதியின்றி காய்கறி, கீரை, பழங்கள், பூக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். தள்ளு வண்டிக் கடைகளும் உள்ளன.
பேருந்துகள் செல்ல இடையூறு ஏற்பட்டு, அவ்வப்போது சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பயணிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஆக்கிரமிப்பு கடைகள் மீது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.