`கோயிலில் அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்' - போலீஸ் குவிப்பு
வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: அண்ணாமலை
வேங்கைவயல் வழக்கினை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'வேங்கைவயல் விவகாரத்தில் அவசர அவசரமாக பட்டியலினத்தைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது. தொடக்கம் முதலே வழக்கில் முன்னுக்குபின்னான தகவல்கள் பரவி வந்துள்ளன.
குற்றம் நடைபெற்று சுமார் 750 நாட்கள் ஆகின்றன. இத்தனை நாட்களும் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் வழக்கு விசாரணையில் இல்லை. தொடக்கம் முதலே வழக்கு விசாரணையின் போக்கு முறையானதாக இல்லை. முன்னுக்குப்பின் முரணாக தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன.
சென்னை உயர்நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாக, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கால அவகாசம் வேண்டும் என்று காவல்துறை மனுத்தாக்கல் செய்த நிலையில், அவசர அவசரமாக, பட்டியல் சமூக இளைஞர்கள் மூன்று பேர் மீதே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாகக் கூறுவது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக அரசின் கீழ் நடக்கும் இந்த விசாரணையின் மீது, பொதுமக்களுக்கு துளியளவு நம்பிக்கையும் இல்லை. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நோக்கமாகத் தெரிகிறது, எனவே, இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள், வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | வேங்கைவயல்: தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் - தமிழக அரசு
வேங்கைவயல் விவகாரம்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிசம்பா் 26 ஆம் தேதி தெரியவந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், நேற்று(ஜன. 24) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில், வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன், முரளிராஜா ஆகிய மூன்று பேருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முரளி ராஜா பொய் தகவலை பரப்பியதாகவும், சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மேல்நிலைத் தொட்டி மீது ஏறி மனிதக் கழிவை தண்ணீரில் கலந்ததாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்த நிலையில், 750 நாள்களுக்குப் பிறகு புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்து சுமார் இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், முடுக்காட்டு ஊராட்சித் தலைவரின் கணவர் முத்தையாவை பழிவாங்கும் நோக்கில் இந்த சம்பவம் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக அரசின் பதிலைப் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: விசிக, மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்