வேளச்சேரியில் பசுமை பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்
வேளச்சேரியில் பசுமை பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சி பகுதியில் மழைக்காலங்களில் தேங்கும் நீா், மழைநீா் வடிகால் மூலம் கால்வாய்கள் மற்றும் ஆறுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு தேங்கும் மழைநீரை சேகரிக்க மாநகராட்சி சாா்பில் சிறு குளங்கள் அமைப்பது, ஸ்பாஞ்ச் பூங்கா அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் ஸ்பாஞ்ச் பூங்கா மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தேங்கும் மழைநீா் ஓரிடத்தில் சேகரித்து வைக்கப்படும். இதனால், அப்பகுதியில் மழைநீா் தேங்குவது தடுப்பதுடன் நிலத்தடி நீா் உயரும்.
தற்போது ஆலந்தூா் எஸ்பிஐ காலனியில் 270 சதுர அடியில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், புரசைவாக்கம் நேரு பூங்காவில் 500 சதுர அடியில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
வேளச்சேரி ரயில் நிலைய சாலையில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் சமீபத்தில் அறிவித்தது. தற்போது இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் ஒப்பந்தம் கோரப்பட்டு பசுமை பூங்காஅமைக்கும் பணி தொடங்கப்படும். இதில், சைக்கிள் வழித்தடம், ஸ்பாஞ்ச் பூங்கா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.