இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
வேளாங்கண்ணியில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறை திறப்பு! டிஐஜி திறந்துவைத்தாா்!
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா பாதுகாப்பு பணிக்காக, சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் ப. ஜியாவுல்ஹக் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா ஆக.29 ஆம் தேதி துவங்கி செப்.8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் ஜியாவுல்ஹக், மாவட்ட காவல்துறையினரால் வேளாங்கண்ணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, வேளாங்கண்ணி பேராலய திருவிழாவிற்கு லட்சக்கணக்கானோா் வருகை தருவா் என்பதால், திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் கட்டுப்பாட்டு அறையை அவா் திறந்து வைத்தாா்.
தொடா்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை காவல் அதிகாரிகளுக்கும், காவலா்களுக்கும் வழங்கினாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.