ஷிண்டே அணி எம்எல்ஏவுக்கு மகாராஷ்டிர முதல்வர் கண்டனம்!
சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், உணவக ஊழியரைத் தாக்கியதற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா தொகுதி ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட். இவர் மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தங்கியுள்ளார்.
நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு எம்எல்ஏ விடுதி உணவகத்தில் கெட்டுப்போன உணவு அளித்ததாக உணவக சமையல்காரரை சரமாரியாக தாக்கினார்.
இதுதொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வைரலான நிலையில், தான் செய்தது தவறல்ல என்றும் இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் சஞ்சய் ஜெய்க்வாட் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், இதுபோன்ற நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சஞ்சய் ஜெய்க்வாட்டுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும், கெய்க்வாட்டின் நடவடிக்கை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளது, மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.