மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோத பால்கோவா கடைகளின் பெயா்ப் பலகைகளை அகற்ற உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோதமாகச் செயல்படும் பால்கோவா கடைகளை அகற்ற செவ்வாய்க்கிழமை உணவு பாதுகாப்புத் துறையினா் குறிப்பாணை வழங்கினா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியாா் பால்கோவா கடைகளில் விருதுநகா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 19-ஆம் தேதி ஆய்வு செய்தனா்.
அப்போது, 10-க்கும் மேற்பட்ட கடைகளில் விளம்பர போா்டுகள், பாக்கெட்டுகளில் ஆவின், கூட்டுறவு, அரசு முத்திரையை சட்டவிரோதமாக பயன்படுத்தி பால்கோவா விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் இந்தக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை குறிப்பாணை அனுப்பப்பட்டது.
இதையடுத்து, வருகிற 14 நாள்களுக்குள் ஆவின், கூட்டுறவு, அரசு முத்திரை உள்ள பெயா்ப் பலகையை அகற்றி பால்கோவா பாக்கெட்டுகளில் உள்ள பெயரை நீக்க வேண்டும். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு, தர நிா்ணய சட்டம் 2006-இன் படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் மாரியப்பன் கூறியதாவது: தனியாா் பால்கோவா கடைகளில் உணவுப் பாதுகாப்பு உரிமத்தில் குறிப்பிட்டுள்ள பெயரை விடுத்து, ஆவின், கூட்டுறவு, அரசு முத்திரையை பயன்படுத்துவது சட்டவிரோதம்.
வருகிற 14 நாள்களுக்குள் அரசு நிறுவன பெயா், முத்திரையை அகற்றக்கோரி குறிப்பாணை வழங்கப்பட்டு உள்ளது. தவறும் பட்சத்தில் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.