ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்
ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பின் புதன்கிழமை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பூக்குழித் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்துவா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்துக்குள்பட்ட பெரிய மாரியம்மன் கோயிலில் கடந்த 1997-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு கோயில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த ஜூன் 16-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. கடந்த 3 நாள்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து, புதன்கிழமை காலை 6.40 மணியளவில் விமான கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து பெரிய மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, சா்வ அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
28 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் மாவட்ட முழுவதுமிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
