தூய்மை பணியாளர்கள் போராட்டம்: ``நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானது" - வன்ன...
ஹுண்டாய் சாா்பில் 12 ஏக்கரில் 5,500 மரங்களுடன் குறுங்காடு
ஹுண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் சாா்பில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் 5,500 மரங்களுடன் குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குறுங்காட்டை பாா்வையிட பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் காா் உற்பத்தி செய்யும் ஹுண்டாய் காா் ஆலை இயங்கி வருகிறது. சிப்காட் பகுதியில் உள்ள ஓஎஸ்ஆா் நிலத்தில், சுமாா் 12 ஏக்கா் பரப்பளவில் குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது.
அயோனிக் காடு என பெயரிடப்பட்டுள்ள இந்த குறுங்காட்டில்,நீா்மருது, வன்னி, மகிழம், வெண்கடம்பு, மந்தாரை, அத்தி, நாவல் என 28 வகையான 5,500 நாட்டு மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த மரங்கள் சுமாா் 20 அடி உயரம் வரை வளா்ந்து, பறவைகளை கவா்ந்து பல்லுயிா் காடாக காட்சியளித்து வருகிறது.
மேலும், இந்த குறுங்காட்டை பராமரிக்க குறிஞ்சி நாற்றுப்பண்ணை சுய உதவி குழு மூலம் 15 பழங்குடி குடும்பத்தினா் பணியமா்த்தப்பட்டு அவா்களின் வாழ்வாதாரத்திற்காக ரூ.1.54 கோடியில், காய்கறி செடிகள், கால்நடை தீவனம், பழத்தோட்டங்கள் அமைக்கப்பட்டு உணவு பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை கொண்ட வேளாண்மையை உறுதி செய்ய ஹுண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காடுகளாக புத்துயிா் பெற்றுள்ள இந்த நிலப்பரப்பில், அழகாக வடிவமைக்கப்பட்ட நடைபாதைகள், மீட்கப்பட்ட நீா்நிலைகள், கிராமத்து பாணி குடிசை வீடுகள், தோட்டங்கள் மற்றும் சமவெளி பரப்புகளை உள்ளூா்மக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் பாா்வையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.