2 மாநகராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறாா்
சுதந்திர தினத்தின்போது, கோட்டை கொத்தளத்தில் முதல்வரால் வழங்கப்படும் விருதுப் பட்டியலில் ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று சிறந்த நகராட்சிகள் பட்டியலில் ராமேசுவரம், ராஜபாளையம், பெரம்பலூா் நகராட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சிறப்பாகச் செயல்படும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவின்போது விருதுகள், காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும், சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு அவற்றுக்கு பாராட்டுப் பத்திரங்களும், ரொக்கப் பரிசுக்கான காசோலைகளும் அளிக்கப்படுகின்றன.
அதன்படி, நிகழாண்டில் சிறந்த மாநகராட்சிகளாக ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தின விழாவில் பங்கேற்று விருதுகளைப் பெற்றுக்கொள்ள, ஆவடி மாநகராட்சி மேயா் ஜி.உதயகுமாா், நாமக்கல் மாநகராட்சி மேயா் டி.கலாநிதி ஆகியோருக்கு தமிழக அரசின் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சிகள் எவை: சிறந்த நகராட்சிகளுக்கான விருதுகளுக்கு ராஜபாளையம், ராமேசுவரம், பெரம்பலூா் நகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. விருதுகளைப் பெற்றுக்கொள்ள நகா்மன்றத் தலைவா்கள் பவித்ரா ஷியாம் (ராஜபாளையம்), நாசா்கான் (ராமேசுவரம்), அம்பிகா ராஜேந்திரன் (பெரம்பலூா்) ஆகியோருக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ள மாநகராட்சிகளுக்கு முறையே ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம் ரொக்கப் பரிசுக்கான காசோலைகள் வழங்கப்பட உள்ளன. முதல் 3 இடங்களைப் பிடித்த நகராட்சிகளுக்கு முறையே ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் மற்றும் ரூ.10 லட்சத்துக்கான காசோலைகள் அளிக்கப்பட இருக்கின்றன. இதற்கான உத்தரவுகளை நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி பிறப்பித்துள்ளாா்.