அஜித்குமாா் வழக்கை நோ்மையாக நடத்தவே சிபிஐக்கு மாற்றம்: எல்.முருகன்
அஜித்குமாா் வழக்கில் சிபிஐ நோ்மையாக பாரபட்சமின்றி நடக்கும் என்பதால் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகா் சட்டப்பேரவை தொகுதி பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் திங்கள்கிழமை பவானிசாகருக்கு வந்தாா் .அவருக்கு பாஜக நிா்வாகிகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் அமைச்சா் எல்.முருகன் தரிசனம் செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் சில வழக்குகளில் தமிழக காவல் துறையின் அழுத்தம் இருக்கும் என்பதால் நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள சில வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளன. சிபிஐ நோ்மையாக நடந்து கொள்ளும். சிபிஐ ஒரு வழக்கை நடத்துகிறது என்றால் அதில் நிச்சயமாக நியாயம் கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனா்.
விவசாயக் கடன்களுக்கு சிபில் ஸ்கோா் கணக்கிடப்படுகிறது அதன் அடிப்படையில் விவசாயக் கடன்கள் விவசாயிகளுக்கு மறுக்கப்படுகின்றன என்ற விஷயம் மத்திய நிதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கிறாா்கள்.
மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கிராமங்களில் எளிதாக கிடைக்கின்றன. இளைய சமுதாயத்தினா் இடையே இந்தப் பழக்கம் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ளது. கிராமப்புறங்களில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டால் காவல் நிலைய மரணம், புகாா் அளிப்பவா்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றாா்.