சென்னிமலை அருகே சாலை விபத்தில் கணவா் பலி; மனைவி காயம்
சென்னிமலை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவியும், மற்றொருவரும் பலத்த காயமடைந்தனா்.
சென்னிமலையை அடுத்த முகாசிப்பிடாரியூா், சென்னியங்கிரி வலசு பகுதியை சோ்ந்தவா் பழனிசாமி(54). இவா் தனது மனைவி புவனேஸ்வரியை(45) அழைத்துக் கொண்டு சென்னியங்கிரி வலசு சாலையில் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றாா்.
அப்போது எதிரில் வந்த சென்னிமலையை அடுத்த புஞ்சைபாலதொழுவு காட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சுரேஷ் (40) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், பழனிசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நோ் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பழனிசாமியின் மனைவி புவனேஸ்வரிக்கு லேசான காயமும், சுரேஷுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.