சுற்றுச்சூழல் புரவலா் விருது பெற்ற ஊராட்சித் தலைவருக்கு அமைச்சா் காந்தி வாழ்த்து
அஜித் ... ஆக்சன்... திரில்லர்... ஆனால்..! விடாமுயற்சி - திரை விமர்சனம்!
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கதைப்படி, நடிகர்கள் அஜித் குமார் (அர்ஜுன்), த்ரிஷா (கயல்) இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு ஒன்றாக அஜர்பைஜானில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே எப்படி காதல் மலர்ந்தது, தற்போதைய வாழ்க்கை என காட்சிகள் நான் லீனியர் பாணியில் காட்டப்படுகின்றன. ஒருகட்டத்தில் த்ரிஷா விவாகரத்து செய்யும் முடிவை எடுக்கிறார். அதற்கு அஜித் ஒப்புக்கொள்ளாமல் பிரச்னையைச் சரி செய்ய முயற்சிக்கிறார். அப்படியான சூழலில், மனைவியைக் காரில் அழைத்துச் செல்லும்போது அர்ஜுன், ரெஜினா கதாபாத்திரங்கள் அறிமுகமாகின்றனர்.
இவர்கள் யார்? என்ன செய்கிறார்கள்? என ஆர்வம் எழும்போது, த்ரிஷா காணாமல் போகிறார். அது, கடத்தல்தான் என்பது தெரிய வருகிறது. யார் கடத்திச் சென்றது என குழம்பும் அஜித், எப்படி த்ரிஷாவைக் கண்டுபிடிக்கிறார் என்பதே திருப்பங்களும் ஆக்சன்களும் இணைந்த விடாமுயற்சியின் கதை.
இயக்குநர் மகிழ் திருமேனி தடம், மீகாமன் படங்கள் மூலம் சிறந்த ஆக்சன் இயக்குநராக அறியப்பட்டார். முக்கியமாக, மீகாமன் வெளியானபோது வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் இன்றைய கால ரசிகர்கள் அப்படத்தைப் பெரிதும் கொண்டாடி வருகின்றனர். கதையாகவும் அதன் உருவாக்கத்திலும் ஏதாவது வித்தியாசமாக சிந்திப்பதில் பெயர் பெற்றவரான மகிழ், விடாமுயற்சியில் தமிழ் சினிமா என எடுக்கப்பட்டு வருபவை எல்லாம் சினிமாதானா? என சில மீறல்களை நட்சத்திர நடிகரை வைத்தே செய்திருக்கிறார்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-06/mwrepbux/GjFzejibIAYM-BT.jpg)
பெரிதாக சம்பாதிக்கும் அழகான ஆணான அஜித்திடம் சரியான அன்பு கிடைக்கவில்லை என மனைவி த்ரிஷா இன்னொரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பது, அது தெரிய வரும்போது நம்முடைய பிரச்னையைப் பேசித் தீர்க்கலாம் என அஜித் போன்ற நடிகர் முன்வருவதும் அக்காட்சிகள் கமர்சியல் சினிமாவில் தைரியமாக பேசப்பட்டிருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. நாயகன் என்றால் கெத்தாக திரிய வேண்டும்; அவரின் காலடியில் பெண்கள் கிடக்க வேண்டும் என்கிற காலம்சென்ற எதிர்பார்ப்புகளையெல்லாம் ‘நாசுக்காக’ உடைத்திருக்கிறார் மகிழ் திருமேனி. அஜர்பைஜான் சாலைகள், அஜித்துக்கும் ஆரவுக்கும் இடையேயான சண்டைக்காட்சிகள் எல்லாம் திரையில் பார்க்க நன்றாக இருக்கின்றன.
அஜித்தை தூக்கிப்பிடிக்கும் காட்சிகளோ, லாஜிக் மீறல்களோ முடிந்தவரை கவனமாகக் குறைக்கப்பட்டு கதையை பாதிக்காமல் இருப்பதை மகிழ் திருமேனி ஒவ்வொரு காட்சியிலும் உறுதிசெய்திருக்கிறார். ஒரு சாதாரண மனிதன் இக்கட்டில் சிக்கிக்கொண்டால் அவனுடைய மனநிலை என்னாவாக இருக்கும் என்பதையும் முடிந்தவரை திரைபடுத்தியுள்ளார்.
ஆனால், எந்தத் திரைக்கதையை நம்பி இக்கதையே எடுத்தாரோ அதுவே பலவீனமாகவும் மாறியிருக்கிறது. முதல்பாதியில் அடுத்தடுத்து எழும் ஆர்வம் ஒருகட்டத்திற்கு மேல் மெல்ல மெல்ல குறைகிறது.
பின்னணி இசையிலும், ஒளிப்பதிவிலும் படத்தின் தரம் உயர்ந்து தெரிந்தாலும் கதையாக சுவாரஸ்யத்தைக் கொடுக்கவில்லை. ஒரே ஆறுதல் சோர்வளிக்காத எடிட்டிங். சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும் அடுத்தடுத்த திருப்பங்களால் உட்கார்ந்து பார்க்க முடிகிறது.
நடிகர் அஜித் குமார் என்ன காரணத்திற்காக இக்கதையைத் தேர்ந்தெடுத்தார் எனத் தெரியவில்லை. தைரியமான முயற்சி. காரணம், நாயக பிம்பம் இல்லாத திருப்பங்களை நம்பியே உருவாகும் ஓர் படத்தின் அங்கமாகத்தான் நடித்திருக்கிறார். த்ரிஷாவுடனான காதல் காட்சிகள், காணாமல்போன மனைவியைத் தேடும் காட்சிகளில் அஜித் உடல்மொழி ரசிக்க வைக்கிறது. இருந்தாலும், அஜித்தை வைத்து ஏன் இந்தப் படத்தை எடுக்க வேண்டும்? என்கிற கேள்விகளும் எழுகின்றன.
![](https://media.assettype.com/dinamani/2025-02-06/lrfn0fkq/GjB2qILaEAAcRi2.jpg)
உச்ச நட்சத்திர நடிகர்கள் கதையம்சமுள்ள படங்களில் நடிப்பது வரவேற்புக்குரியதுதான். ஆனால், விடாமுயற்சியின் கதைக்கு அஜித் ஒன்றாமல் இருக்கிறார். சில வசனங்களிலும் செயற்கைத்தனம் அதிகமாக இருக்கிறது. அஜித் பேசும், “மன நிம்மதியோட ஆரோக்கியமா வாழ முயற்சி செய்ங்க” என்கிற வசனம் கைதட்டல் பெறுகிறது. மற்றபடி, வழக்கமான பழிவாங்கல் வசனங்களே.
நடிகர் அர்ஜுனுக்கு ஆக்சன் காட்சிகள் கொண்ட கதாபாத்திரம் என்பதால் வழக்கம்போல் கதை வேகத்திற்கான நடிப்பைக் கொடுத்துவிட்டார். நாயகியாக த்ரிஷா கொஞ்சமாக ஈர்க்கிறார். சவதீகா பாடலில் த்ரிஷாவின் நடனக்காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது. ஆனால், த்ரிஷாவைவிட பலமான கதாபாத்திரம் நடிகை ரெஜினா கேசஸ்ட்ராவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வில்லியாக தோன்றும் அவர் தன் கண் பார்வையிலும் உடல்மொழியிலும் தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். அவருக்கும் அர்ஜுனுக்கும் இடையேயான காட்சிகள் நன்றாக எழுதப்பட்டிருந்தன. நடிகர் ஆரவுக்கும் முக்கியமான காட்சிகள் உண்டு. தன் கதாபாத்திரதிற்கு ஏற்ப நடித்திருக்கிறார்.
படத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்களாக படப்பிடிப்பு பகுதிகளும், ஓம் பிரகாஷின் ஒளிப்பதையும் சொல்லலாம். இவை, படத்திற்கு பிரமாதமான தோற்றத்தை தருகின்றன. திடீரென, ஏதாவது ஹாலிவுட் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோமா என எண்ண வைத்துவிட்டார் இயக்குநர். அதேநேரம், முதல் பாதியில் சில திருப்பங்கள் நிகழ்ந்து ஆகா... கதை நன்றாக செல்கிறதே என நினைத்தால், இரண்டாம் பாதியி்ன் சொதப்பல்கள் படத்தின் வெற்றியையே காலிசெய்துவிட்டன.
மகிழ் திருமேனி தரமான படங்களை எடுக்கக்கூடிய இயக்குநர் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்பதை இப்படத்தின் காட்சிகள் உறுதிசெய்கின்றன. ஆனாலும், இப்படம் அவருடைய படமாகத் தெரியவில்லை. படக்குழுவினருக்கு விடாமுயற்சியாக இருந்தாலும் எங்களுக்கு இது, ‘வீண்முயற்சி’ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.