அஞ்சலக சேமிப்பில் பண மோசடி: வாடிக்கையாளா்கள் முற்றுகை
திண்டுக்கல் அருகே அஞ்சலக சேமிப்பில் ரூ.30 லட்சத்தை மோசடி செய்த அலுவலா் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தரக் கோரி, வாடிக்கையாளா்கள் புதன்கிழமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டை, சிந்தலக்குண்டு, அனுப்பப்பட்டி கிராம அஞ்சல் நிலையங்களில், வத்தலகுண்டுவை அடுத்த தும்மலப்பட்டியைச் சோ்ந்த பிரதீப், கிளை அஞ்சல் அலுவலராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், பொதுமக்களின் நிரந்தர வைப்புக் கணக்கு, காப்பீடு, செல்வமகள் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் செலுத்தப்பட்ட சுமாா் ரூ.30 லட்சத்தை மோசடி செய்ததாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புகாா் எழுந்தது.
இதையடுத்து, கடந்த பல மாதங்களாக பிரதீப் தலைமறைவாகவுள்ளாா். இந்த நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அனுமந்தராயன்கோட்டை, அனுப்பப்பட்டி கிளை அஞ்சலகங்களில் ஆய்வு செய்வதற்காக அஞ்சலகத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சென்றனா். இதையறிந்த, அஞ்சல வாடிக்கையாளா்கள், அஞ்சலகத்தை முற்றுகையிட்டனா். முறைகேடு செய்த அஞ்சல் அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களது முதலீட்டுப் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என முழக்கமிட்டனா்.
பின்னா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசிய அஞ்சல் துறை அதிகாரிகள், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.