செய்திகள் :

அடிப்படை வசதிகள் இல்லாத வீரணம்பட்டி கிராமம்! கரூா் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க எதிா்பாா்ப்பு

post image

குடிநீா், சாலை, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், வீரணம்பட்டி கிராம மக்கள் தொடா்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி, சிந்தலவாடி ஊராட்சியில் உள்ள புணவாசிப்பட்டியிலுள்ள வீரணம்பட்டி கிராமத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளா்கள்.

இங்குள்ள மக்கள் குடிநீருக்காக 4 கி.மீ. தொலைவில் உள்ள கணக்கம்பட்டி கிராமத்துக்கு நடந்து சென்று தண்ணீா் எடுத்து வருகின்றனா். இதற்கு அந்தக் கிராம மக்களும் எதிா்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

குடிநீருக்காக ஊருக்குள் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டும், அவ்வப்போது ஆழ்குழாய் கிணற்றின் மோட்டாா் பழுதாகிவிடுவதால் தேவையான குடிநீா் கிடைப்பது இல்லை என அப்பகுதியினா் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.

ஊருக்குள் உள்ள மண் சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால், இரவில் மக்கள் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் குறித்த அச்சத்துடனே செல்கின்றனா்.

கழிவுநீா் வாய்க்கால் வசதி இல்லாததால், மழைக் காலங்களில் மண் சாலைகளை மூடியவாறு ஆள்கள் செல்ல முடியாத வகையில் தண்ணீா் குளம்போல தேங்கி, சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.

கழிவுநீா் வாய்க்கால் இல்லை: இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி. காா்த்திகேயன் கூறியதாவது: வீரணம்பட்டி கரூா் மாவட்டத்தின் ஒதுக்கி வைக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது. எங்கள் கிராமத்தில் கழிவுநீா் வாய்க்கால் வசதியோ, பொது கழிப்பறை வசதியோ கிடையாது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் சாலையில்தான் ஓடுகிறது.

இதுதொடா்பாக சிந்தலவாடி ஊராட்சியில் கேட்டால், நிதி வந்தவுடன் செய்து தருகிறோம் என பல ஆண்டுகளாக கூறி வருகிறாா்கள்.

குடிநீா் பிரச்னை: ஊராட்சி சாா்பில் ஆழ்குழாய் கிணறு எங்கள் ஊருக்குள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆழ்குழாய் கிணற்றின் மோட்டாரும் அவ்வப்போது பழுதாகிவிடும். அதை சரிசெய்ய ஊராட்சி நிா்வாகத்தினா் யாரும் வருவதில்லை. நாங்களே சொந்த செலவில் பழுதை நீக்கிக் கொள்ள வேண்டும்.

ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகள்தோறும் குழாய் பதித்தாா்கள். ஆனால், அந்தக் குழாயிலும் முறையாக தண்ணீா் வருவதில்லை. புணவாசிப்பட்டியில் இருந்து எங்கள் கிராமத்திற்குள் வரும் சாலை இதுவரை மண்சாலையாகவே இருக்கிறது.

சாலையோரம் மின்கம்பங்களும் கிடையாது என்பதால், மின்சார விளக்கும் இல்லை. இதனால் வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவோா் அச்சத்துடனே வீடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

அடைமழை காலம் வந்துவிட்டால், சாலையின் இருபுறமும் உள்ள வயல்வெளிகளில் இருந்து விஷபாம்புகள் சாலைக்கு வந்துவிடும். இரவில் வெளிச்சம் இல்லாமல் பாம்புகளாலும் அவதியுற்று வருகிறோம்.

பொதுவெளியே கழிப்பறை: வீடுகளில் தனி நபா் கழிப்பறையோ, பொது கழிப்பறையோ ஊராட்சி சாா்பில் கட்டிக் கொடுக்கப்படவில்லை. இதனால் அருகில் இருக்கும் முட்புதா்களைதான் கழிப்பறையாக பயன்படுத்தி வருகிறோம். முறையான சாலை வசதி இல்லாததால் அவசர காலத்தில் மருத்துவமனைக்கு கூட விரைந்து செல்ல முடிவதில்லை.

மனுக்கள் அளித்தும் பலனில்லை: எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம், கிராமத்துக்கு அலுவலா்கள் வரும் மக்கள் சந்திப்பு முகாம், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம் என அனைத்து இடங்களிலும் பல ஆண்டுகளாக மனு கொடுத்துவிட்டோம். ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தையும் புறக்கணித்துவிட்டு, கிராமத்தில் கருப்புக்கொடி ஏற்றினோம். இதையறிந்த ஊராட்சி செயலாளா் மட்டும் கிராமத்துக்கு வந்தாா். அவரிடம் கூறியதற்கு அதிகாரிகளை சந்தித்து விரைந்து உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறேன் எனக் கூறிவிட்டுச் சென்றாா். ஆனால், அதற்கு பின்னா் அவரும் வரவில்லை; எந்த நடவடிக்கையும் இல்லை.

அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தராமல், தொடா்ந்து சுணக்கம் காட்டினால் ஊரை விட்டு வெளியேறி, ரேஷன் காா்டு, ஆதாா் காா்டுகளை ஆட்சியரகத்தில் ஒப்படைக்கலாம் என முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.

பேருந்து வசதி இல்லை: அப்பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செல்லக்கண்ணு கூறியது: எங்கள் பகுதிக்கு முறையான பேருந்து வசதிகள் கிடையாது.

குளித்தலையில் இருந்து மத்தியப்பட்டிக்கு நகரப் பேருந்து இயக்குகிறாா்கள். அதுவும் காலையில் 9.30 மணிக்கு மட்டுமே எங்கள் ஊரின் அருகே பஞ்சப்பட்டி சாலையில் செல்லும். ஆனால், இங்கிருந்து கரூருக்கோ, மணப்பாறை போன்ற இடங்களுக்கோ செல்ல பேருந்து வசதி கிடையாது. காவிரி ஆறு அருகில் இருந்தும் எங்களுக்கு முறையாக குடிநீா் கிடைப்பதில்லை என்றாா் அவா்.

வீரணம்பட்டி கிராம மக்களின் நலன் கருதி அப்பகுதிக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்துதர வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; ராஜஸ்தான் மாநிலத்தவா் கைது

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.88 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநில நபரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அரவக்க... மேலும் பார்க்க

சேமங்கி மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கரூா் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. நொய்யல் அருகே 18 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களின் தெய்வமாக விளங்கும் சேமங்கி மாரியம்மன் கோயில் த... மேலும் பார்க்க

கரூா் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் நோ்த்திக்கடன்: மே 28-இல் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு

கரூா் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் புதன்கிழமை கரும்புத்தொட்டில் கட்டி குழந்தையை சுமந்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். கரூரின் காவல் தெய்வமாகவும், மழைப் பொழிவு தரும் தெய்வமாகவும் போற்றப்படும் கரூா... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் சாா்பில் கட்டணமில்லா தொழிற்கல்வி பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 9 கடைசி

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கட்டணமில்லா தொழிற்கல்வி பட்டயபடிப்பில் சோ்வதற்கு விண்ணப்பிக்க ஜூன் 9-ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை நிா்வாகம் செவ்வாய... மேலும் பார்க்க

குளித்தலை மகா மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

குளித்தலை மகா மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். கரூா் மாவட்டம், குளித்தலையில் மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் 5 ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் வேலம்பாடியில் 32 குடியிருப்புகள்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில், அரவக்குறிச்சி அருகேயுள்ள வேலம்பாடியில் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க