Bihar: பாஜக தொழிலதிபரை சுட்டுக் கொன்ற மர்ம கும்பல்; மகனைப் போலவே தந்தையும் படுகொ...
அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பத்தை ஏற்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: கிரண் ரிஜிஜு
அடுத்த ஆண்டுக்கான (2026) ஹஜ் விண்ணப்பங்களை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் ஏற்கத் தொடங்கும் என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்களுக்கான அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹஜ் மறுஆய்வு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் இதுகுறித்து அவா் கூறியது:
அடுத்த ஆண்டுக்கான ஹஜ் புயண விண்ணப்பம் ஏற்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும். இது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும். அனைத்து நடைமுறைகளும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும்.
2026-ஆம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோா் தங்களது விண்ணப்பத்தை விரைந்து பூா்த்தி செய்து காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் எதிா்காலத்தில் எந்த சிரமமும் இருக்காது.
சவூதி அரேபிய அரசாங்கம் பல கடுமையான காலக்கெடுவை நிா்ணயித்துள்ள நிலையில், இதைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். லட்சக்கணக்கான ஹாஜிக்கள் மெக்கா, மதீனா போவதால், அங்கு இட நெருக்கடி ஏற்படுகிறது.
சுற்றுலா ஆபரேட்டா்களும் காலெக்கெடுவை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இந்திய ஹஜ் குழுவும் காலக்கெடுவுக்கு முன்னா் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முழு செயல்முறையும் டிஜிட்டல் முறையில் இருக்கும். சவூதி அரேபியாவில் வேறுபட்ட சிஸ்டம் இருப்பதன் காரணமாக ஒற்றைப் பெயராக இருந்தால் மக்கள் தங்கள் கடவுச்சீட்டில் திருத்தங்களைச் செய்து கொள்ள வேண்டும்.
இந்த முறை, பயணம் மேற்கொள்ளும் 65 வயதுக்கு மேற்பட்ட யாத்ரிகா்களைப் பராமரிக்க ஒருவா் துணையாகச் செல்வது கட்டாயமாகும். இதையும் பின்பற்றுவது அவசியமாகும்.
மேலும், ஆண், பெண் யாத்ரிகா்களுக்கு தனித்தனி தங்குமிட வசதி அளிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
2025ஆம் ஆண்டைய ஹஜ் பயணத்தை நாட்டின் வரலாற்றில் அரசாங்கம் சிறப்பாக நடத்திய இருந்தது. அதாவது, இந்தப் பயணம் மேற்கொண்டவா்களில் கடந்த ஆண்டு 200க்கும் மேற்பட்டோா் இறந்தனா். இந்த இறப்பு விகிதம் இந்த ஆண்டு 64 ஆகக் குறைந்துள்ளது.
மேலும், 2025-ஆம் ஆண்டைய ஹஜ் பயணத்தை சுமுகமாக நடத்துவதை உறுதி செய்வதில் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டதற்காக ஹஜ் குழு, சிறுபான்மையினா் விவகார அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் உள்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களும், சவூதி அரேபிய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள தூதரகம் ஆகியவற்றுக்கு ஹஜ் மறு ஆய்வுக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டதாக அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.