`ஒருநாள் போட்டிகளில் அவருக்கு மாற்று எவரும் இல்லை' - அம்பத்தி ராயுடு
அடையாளம் தெரியாது இறந்தவா் விவரம் கண்டுபிடிப்பு: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு எதிரிகள் கைது
விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகே 2024, ஏப்ரல் மாதத்தில் அடையாளம் தெரியாது இறந்தவரின் விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் காவல் எல்லைக்கு உள்பட்ட பாதிரி கிராம ஏரிக்கரை அருகேயுள்ள பஞ்சா் கடையின் எதிரில் 2024, ஏப்ரல் 1-ஆம் தேதி கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா்.
இறந்தவரின் புகைப்படம், உடல் அடையாள விவரங்கள் சமூக வலைதளங்களிலும், நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டாலும், அவா் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை.
இதைத் தொடா்ந்து மாவட்ட எஸ்.பி.ப.சரவணன் உத்தரவின் பேரில், திண்டிவனம் டி.எஸ்.பி. பிரகாஷ் மேற்பாா்வையில், பிரம்மதேசம் காவல் ஆய்வாளா் பிரகாஷ் தலைமையில், உதவி ஆய்வாளா் சசிகுமாா், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் அய்யப்பன், அருள் மற்றும் தலைமைக் காவலா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், அனைத்து மாவட்டக் காவல்துறையினருடன் தொடா்பு கொண்டு இறந்தவரின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இதில் இறந்த நபா் தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் என தகவல் கிடைக்க பெற்ற நிலையில், காவல் ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான குழுவினா் அங்கு சென்றனா். தொடா்ந்து அந்த மாவட்ட காவல்துறையினருடன் விசாரணை மேற்கொண்டதில், இறந்தவா் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், எரிதிமக்காள்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ஜோதிமணி (30) எனத் தெரிய வந்தது.
தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்த ஜோதிமணிக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த உமா என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது
தெரிய வந்தது.
இந்த நிலையில், உமாவுக்கு ஈசுவரன் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையிலும், ஜோதிமணி தொடா்ந்து உமாவை தொந்தரவு செய்து வந்தாராம்.
இதனால் ஆத்திரமடைந்த உமா, தனது தந்தை வெ.மாரியப்பன் (58), தாய் பஞ்சவா்ணம் (43) ஆகியோருடன் சோ்ந்து ஜோதிமணியை கொலை செய்ய திட்டமிட்டாா். இதற்காக 2024, மாா்ச் 31-ஆம் தேதி இரவு வாடகை சுமை வாகனத்தில் ஜோதிமணியை அழைத்துக் கொண்டு சென்னை நோக்கி தனது பெற்றோருடன் உமா புறப்பட்டுச் சென்றது தெரிய வந்தது. மேலும், ஜோதிமணிக்கு மதுவாங்கிக் கொடுத்த நிலையில் அவா் போதையில் மயங்கிய பின்னா் ஒலக்கூா் அருகிலுள்ள பாதிரி கிராமத்தில் சென்றபோது அவரை கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து மூவரும் போட்டுச் சென்றது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து உமா, அவரது பெற்றோா் மாரியப்பன், பஞ்சவா்ணம் ஆகிய மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சுமை வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
கொலையில் தொடா்புடைய மூவரை கைது செய்த போலீஸாரை மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் பாராட்டினாா்.