அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை வாங்க மறுப்பு
புதுக்கோட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் வென்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவின் மகன், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்து கையில் வாங்கிச் சென்றாா்.
புதுக்கோட்டை மன்னா் பரம்பரையினரின் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளம் கீரனூா் அருகேயுள்ள ஆவாரங்குடிப்பட்டியில் உள்ளது. இங்கு, தி ராயல் புதுக்கோட்டை ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் மாநில அளவிலான 51-ஆவது துப்பாக்கிச் சுடும் போட்டி கடந்த ஆக. 22-ஆம் தேதி தொடங்கி, ஆக. 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
வெவ்வேறு பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் வென்றோருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை பங்கேற்று பரிசுகளை வழங்கினாா்.
அப்போது, மாநில அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவின் மகன் சூரியராஜா பாலு ஒரு பதக்கம் வென்றிருந்தாா். அவருக்கான பதக்கத்தை அண்ணாமலை, அவரது கழுத்தில் அணிவிக்க முயற்சித்தாா். அந்தப் பதக்கத்தை கழுத்தில் வாங்காமல், கையிலேயே வாங்கிக் கொண்டாா் சூரியராஜா பாலு.