அதிமுக உள்கட்சி விவகாரம்: ``தேர்தல் ஆணையத்திற்கு விசாரிக்க அதிகாரம் இல்லை" - சி.வி.சண்முகம் ஆவேசம்
அதிமுக பொதுச் செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து, தேர்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், ``முதலில் தேர்தல் ஆணையத்துக்கு விசாரிக்க அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையத்துக்கு இரண்டு அதிகாரங்கள் மட்டும்தான் இருக்கிறது. ஒன்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29A, மற்றொன்று பாரா 15 (தேர்தல் சின்னம் தொடர்பானவை). ஒரு கட்சியைப் பதிவுசெய்ய வேண்டும் என்றால், அந்தக் கட்சியின் விதிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய வேண்டும். அவை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு இருக்கிறதா என்று பார்த்து முடிவெடுக்க வேண்டும் என்ற அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு என்கிறது 29A.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-05/d58b2c7c-a641-428b-a70b-d0a65274e13e/IMG_20230530_WA0004.jpg)
அதே பிரிவில், 29A (9) தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியில் பொறுப்பாளர்கள் மாற்றம், பெயர் மாற்றம், விதிகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாகத் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரியப்படுத்தும்போது அதைப் பதிவுசெய்யவேண்டியது மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் வேலை. வெறும் குமாஸ்தா வேலை மட்டும் தானே தவிர, அது சரியா தவறா என்று பார்க்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை.
அந்த மாற்றங்கள் மீது ஆட்சேபனைகள் இருந்தால் அதை விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டும்தான் இருக்கிறது. அதேபோல், ஒரு இயக்கத்தில் பிளவு ஏற்பட்டால், நாங்கள்தான் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு குழு கூறினால், தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அந்தக் குழுவிடம் விசாரணை செய்து, யார் உண்மையான அந்த அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று சொல்கின்ற அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது என்கிறது பாரா 15.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-05/c72d1153-844a-4b1c-abea-a8f265609a0e/Untitled_14.jpg)
இவற்றின்படி, உள்கட்சி விவகாரங்களில் தலையிட தங்களுக்கு உரிமை இல்லை என்று தேர்தல் ஆணையம் நீதிமன்ற விசாரணையில் ஒப்புக்கொண்டுவிட்டது. இருப்பினும், நீதிமன்றத்தில் இன்று இப்படித் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதைத் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாகத் தேர்தல் ஆணையம் எடுத்துக்கொண்டதை நாங்கள் எதிர்க்கிறோம்" என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs