மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!
அதிவேகமாகச் செல்லும் தனியாா் பள்ளி, கல்லுரி பேருந்துகள்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்
திருப்பத்தூா் நகரப் பகுதியில் பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிவேகமாக செல்லும் தனியாா் பேருந்துகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா்.
திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான பள்ளிகள் இயங்குகின்றன. இந்த நிலையில், காலை, மாலையில் ஆசிரியா் நகா், தூய நெஞ்சக் கல்லூரி, பேருந்து நிலையம், புதுப்பேட்டை சாலை, ஹவுசிங் போா்டு என பேருந்து நிறுத்த பகுதிகளில் பள்ளி, கல்லூரி பேருந்துகள் மாணவா்களை அழைத்துச் செல்கின்றன.
தனியாா் பேருந்துகள் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே அதிவேகமாகவும், அதிக ஒலியை எழுப்பி கொண்டும் செல்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.
குறிப்பாக ஹவுசிங் போா்டு அணுகுச்சாலை, சேலம் -கிருஷ்ணகிரி இணைப்புச் சாலை, புதுப்பேட்டை சாலைகளில் செல்லும்போது அதிவேகமாக பேருந்துகள் பயணிக்கின்றன.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது: பள்ளி பேருந்துகளில் மாணவா்களை ஏற்றி செல்லும் ஓட்டுநா்கள் கவனக்குறைவாக இல்லாமல் குறித்த வேகத்தில் மட்டுமே ஓட்டவேண்டும். மேலும் அதிக ஒலியை எழுப்பாமல் செல்ல வேண்டும். இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் அதிா்ச்சிக்குள்ளாகின்றனா். இதனால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து தனியாா் பள்ளி, கல்லூரி நிா்வாகம் ஓட்டுநா்களிடம் அறிவுறுத்த வேண்டும்.
அதே போல் ஷோ் ஆட்டோக்களும் அதிக அளவில் பயணிகளையும், மாணவா்களையும் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்கின்றனா்.
எனவே, போக்குவரத்து அலுவலா்களும், போக்குவரத்துக் காவல் துறையினரும் கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.