அனைத்து நிலையிலும் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை
ஒன்றாம் வகுப்பு தொடங்கி உயா்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக, அந்த அமைப்பின் தலைவா் அ. வியனரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைமுறையிலிருக்கும் மாநிலக் கல்வித் திட்டத்தைச் செம்மைப் படுத்தி மழலையா் கல்வி முதல் உயராய்வுக் கல்வி வரைத் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டு வரவேண்டுமென அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா்.
தமிழக அரசின் கல்விக் கொள்கையில் இருமொழிக் கல்விக் கொள்கைக்காக ஹிந்தி கட்டாயம் என்பதை நீக்கி அரசாணை வெளியிட்டபோதே, தமிழ் வழிக்கட்டாயம் என்பதை வலியுறுத்தவில்லை. இதுவே, தமிழ்வழி கல்விப் புறக்கணிப்பிற்கு அடித்தளமாக அமைந்து விட்டது.
தற்போதைய திமுக ஆட்சியில், நீதியரசா் முருகேசன் தலைமையிலான ஆணையம் பரிந்துரைத்த தமிழ்வழிக் கல்வித் திட்டத்தை மடை மாற்றும் வகையில் செயல்படுகிறது திமுக அரசு. தாய்மொழிக் கல்வி என்ற அறிவிப்பு மீண்டும் தமிழ்வழி கல்விக்கு திமுக அரசு செய்யும் பச்சைத் துரோகமாகும்.
எனவே, அனைத்து நிலைகளிலும் முழுமையான தமிழ்வழிக் கல்வியை அறிவித்து செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றோம். இல்லையேல் தமிழா்களால் முன்னெடுக்கப்படும் மீண்டுமொரு தமிழ்ப் புரட்சியை திமுக அரசு சந்திக்க நேரிடும் என அ. வியனரசு தெரிவித்துள்ளாா்.