79th Independence Day: "78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் தான் நமது நாட்டிற்கு வழிகா...
சுதந்திர தினம்: பலத்த பாதுகாப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சி மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாள்களாகவே திருச்சி ரயில் நிலையம், பன்னாட்டு விமான நிலையம், பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், மத்தியப் பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் முக்கியப் பகுதிகளில் போலீஸாா் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதேபோல, திருச்சி பன்னாட்டு விமான நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் தீவிரப் பரிசோதனைக்குப் பிறகே பயணிகளின் உடைமைகள் அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் சுதந்திர தின விழா டிவிஎஸ் டோல்கேட் அருகேயுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, ஆயுதப்படை மைதானப் பகுதிக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இருசக்கர வாகனப் பேரணி: சுதந்திர தினத்தையொட்டி ரயில்வே பாதுகாப்புப் படையினா் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணியாக வியாழக்கிழமை சென்றனா். தமிழ்நாடு 5 பட்டாலியன் நிலையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணா்வு வாகனப் பேரணி காஜா மலை, அரபிக் கல்லூரி, மன்னாா்புரம், இந்தியன் பேங்க் காலனி, சுந்தா் நகா், கே.கே.நகா் வழியாகச் சென்று எல்.ஐ.சி. காலனியில் நிறைவடைந்தது.
இந்த ஊா்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியை கைகளில் ஏந்திச் சென்றனா்.