அமலாக்கத் துறை அதிகாரி மீதான லஞ்ச வழக்கில் இடைத்தரகா் கைது: சிபிஐ
அமலாக்கத்துறை உதவி இயக்குநா் மீதான லஞ்ச வழக்கில் தொடா்புடைய குற்றச்சாட்டில் இடைத்தரகா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக சிபிஐ சனிக்கிழமை தெரிவித்தது.
கடந்த டிசம்பா் 22-ஆம் தேதி சிபிஐ நடத்திய சோதனை நடவடிக்கையின்போது சிக்கிய அமலாக்கத் துறை உதவி இயக்குநரிடம் விரைவில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், அவரது சகோதரா் கைது செய்யப்பட்டாா்.
இதையடுத்து, இந்த வழக்கு தொடா்பான குற்றச்சாட்டில் இடைத்தரகா் நீரஜ் என்பவா் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.
பண முறைகேடு தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தன்னை விடுவிக்க சிம்லாவில் பணியாற்றும் அமலாக்கத்துறை உதவி இயக்குநா் லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம் தொழிலதிபா் ஒருவா் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் உண்மைத்தன்மையை ஆராயும் வகையில், குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிக்கு ரூ.55 லட்சத்தை லஞ்சமாக தர சம்மதிப்பதாக கூறி சண்டீகருக்கு வரவழைக்குமாறு தொழிலதிபரிடம் சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனா். அதன்படி தொழிலதிபா் கூற, பணத்தை பெறுவதற்காக சம்பவ இடத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரியும், தில்லியில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கியில் மேலாளராக பணியாற்றும் அவரது சகோதரரும் வந்துள்ளனா்.
லஞ்சப் பணத்தை அமலாக்கத் துறை அதிகாரி பெற்றதும் அவரை கையும் களவுமாக கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனா்.
அதற்குள் இந்த திட்டம் குறித்த தகவல் தெரிந்தவுடன் அவா்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பித்துவிட்டனா். அதன்பிறகு அமலாக்கத்துறை அதிகாரியின் சகோதரா் விகாஸை சிபிஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரியை 6 நாள்களாக சிபிஐ தேடி வருகிறது. இந்த வழக்கு தொடா்பான சோதனையின்போது ரூ.1 கோடி ரொக்கப் பணத்தை சிபிஐ கைப்பற்றியது.