அமைச்சருக்கு எதிராக கருத்து: திமுக நிா்வாகிகளிடம் விசாரணை
தமிழக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட திமுக நிா்வாகிகளிடம் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.
தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் துரைராஜ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் சிலா் செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விசாரணைக்கு சென்றுவிட்டு வெளியே வந்தனா். அப்போது அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சில கருத்துகளை பதிவிட்டிருந்தோம். அவா் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும், வேளாண் துறை அமைச்சராகவும் இருக்கிறாா். இந்த மாவட்டத்துக்கு குறிப்பிடும் வகையில் எந்த திட்டத்தையும் அவா் செயல்படுத்தியதில்லை எனவும், இவரை மாவட்ட பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டிருந்தோம். இதுகுறித்து காவல் துறையினா் எங்களிடம் விசாரித்தனா். கட்சித் தலைமை எங்களிடம் விசாரித்தாலும் இதையே தெரிவிப்போம் என்றனா்.