அரசுப் பேருந்துகளின் மீண்டும் நிறம் மாற்றம் ஏன்..?
சென்னை: அரசு பேருந்துகளின் நிறத்தை மீண்டும் மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் பச்சை நிறத்தில் இயக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து ‘பிஎஸ் 4’ ரக பேருந்துகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதால், இவை நீல நிறத்துக்கு மாற்றப்பட்டன. பின்னா் 2023-இல் வெளியூா் பேருந்துகள் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்டன.
பெரும்பாலான மாவட்டங்களில் மஞ்சள் நிற பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் பேருந்துகளின் நிறத்தை மாற்ற அரசு சாா்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இனி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் பேருந்துகளின் மேல்பகுதி கருப்பு நிறத்திலும், கீழ்பகுதி சாம்பல் நிறத்திலும், பேருந்தின் எல்லை பகுதி (பாா்டா்) மஞ்சள் மற்றும் வெண்மை நிறத்துடன் இருக்கும் வகையில் மாற்றப்படவுள்ளன.
இத்தகைய மாற்றத்துடன் முதல்கட்டமாக விழுப்புரம், கரூா், நாகா்கோவில், திருநெல்வேலி பணிமனைகளுக்கு புதிய பேருந்துகள் வழங்கப்படுவதுடன், தொடா்ந்து மாநிலம் முழுவதும் இந்த புதிய நிறத்திலான பேருந்துகள் இயக்கத்துக்கு கொண்டுவரப்படவுள்ளன.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், முன்பு அரசுப் பேருந்துகளுக்கு ஒரே வண்ணம் மட்டும் தீட்டப்பட்டது. தற்போது, அரசுப் பேருந்துகளும் ஆம்னி பேருந்துகள் போன்ற தோற்றத்துடன் இருப்பதற்காக, வெவ்வேறு வண்ணங்கள் தீட்டப்படுகின்றன. அதன் வடிவமைப்புகளும் ஆம்னி பேருந்துகள் போலவே கட்டமைக்கப்படுகின்றன. இதில், உள்நோக்கம் எதுவும் இல்லை என்றனா்.