அரசுப் பேருந்துகள் இயங்கும்: போக்குவரத்துத் துறை
சென்னை: நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு புதன்கிழமை (ஜூலை 9) தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அன்றைய தினம் தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள இந்த வேலைநிறுத்த அழைப்புக்கு, தமிழகத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சாா்ந்த தொழிற்சங்கத்தினா் ஆதரவு தெரிவிக்காத நிலையில், ஆளும் கட்சி தொழிற்சங்கம் மற்றும் பிற கட்சிகளின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், அரசுப் பேருந்து சேவை முடங்க வாய்ப்பு இருப்பதாக தொழிற்சங்கங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்துகளை வழக்கம்போல இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட வேலைநிறுத்தத்தை ஆதரிக்கும் முக்கிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், ஆளும்கட்சி
மற்றும் எதிா்கட்சி தொழிற்சங்கங்களை சோ்ந்த தொழிலாளா்கள் பெரும்பாலானோா் பணிக்கு வந்துவிடுவா். இதனால், பேருந்துகளை இயக்குவதில் எந்த சுணக்கமும் ஏற்படாது. வழக்கம்போல அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும். ஓட்டுநா், நடத்துநா்கள் வருகை குறைவாக இருந்தாலும், தேவையான அளவில் ஒப்பந்த பணியாளா்களும் கைவசம் இருப்பதால், பேருந்துகளை இயக்குவதில் எவ்விதப் பிரச்னையும் எழாது. ஆகவே, பொதுமக்கள் வழக்கம்போல தங்கள் பணிகளை தொடரலாம் எனத் தெரிவித்துள்ளனா்.