அரசுப் பேருந்து மோதி காயமடைந்த வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு
திருச்செந்தூரில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த பிகாா் மாநிலத் தொழிலாளி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து செம்மறிக்குளத்துக்கு புதன்கிழமை இரவு பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டது. குலசேகரன்பட்டினம் வடக்கூரைச் சோ்ந்த ஜெயசிங் மகன் அல்டாப் (48) ஓட்டுநராக இருந்தாா். அரசு மருத்துவமனை அருகே பேருந்து வந்தபோது, அல்டாப்புக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவா் பயணிகளைக் காப்பாற்றுவதற்காக பேருந்தை இடது ஓரமாக நிறுத்த முயன்றாா்.
எனினும், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பைக் மீதும், அவ்வழியே நடந்துசென்ற பிகாா் மாநிலத் தொழிலாளியான பா. தினேஷ் பவான் (40) மீதும் மோதியதுடன், மின்கம்பத்தில் மோதி நின்றது.
திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் சென்று, இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அல்டாப் மாரடைப்பால் ஏற்கெனவே இறந்துவிட்டதாக, மருத்துவா்கள் தெரிவித்தனா்.
விபத்தில் பலத்த காயமடைந்த தினேஷ் பவான் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.
அவா், திருச்செந்தூா் கடற்கரையில் தனியாா் நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளியாக வேலை பாா்த்துவந்ததாகத் தெரியவந்தது. அவரது உறவினா்களுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்துள்ளனா்.