தகைசால் தமிழரே, தமிழ்நாடே உங்களை வாழ்த்துகிறது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்கீடு: சிஐடியூ சம்மேளனம் வலியுறுத்தல்
நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க தொழிலாளா் வைப்பு நிதியை செலவு செய்யாமல், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக சிஐடியூ சம்மேளன பொதுச் செயலா் கே. ஆறுமுகநயினாா் வலியுறுத்தினாா். சிஐடியூ விருதுநகா் மண்டலம் சாா்பில் 27-ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் விருதுநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட போக்குவரத்துக் கழக சிஐடியூ சம்மேளன பொதுச் செயலா் கே. ஆறுமுகநயினாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 17,662 கிராமங்களில் 17,600 கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் அதிகளவு கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேவை துறை என்பதால், போக்குவரத்துத் துறை இழப்பில் இயங்கி வருகிறது. எனவே, வரவு- செலவு கணக்கு பாா்க்காமல் இந்த இழப்பை அரசு ஈடுகட்ட வேண்டும்.
அரசுப் போக்குவரத்துத் துறையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கான நிதியை வழங்காமல், தொழிலாளா்களின் வைப்பு நிதி, கிராஜூவிட்டி தொகையான ரூ.15 ஆயிரம் கோடியை செலவு செய்திருக்கின்றனா். இதனால், கடந்த 20 மாதங்களாக பணி ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு ரூ. 3,500 கோடி வழங்காமல் நிலுவையில் உள்ளது.
ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு 9 ஆண்டுகளாக அகவிலைப்படி உயா்த்தப்படவில்லை. பேருந்துகளுக்குத் தேவையான உதிரிபாகங்கள் வாங்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் 3,500 புதிய பேருந்துகள் வாங்க வேண்டும். ஆனால், தற்போது, 2,500 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு இதை வரவு-செலவு பிரச்னையாக கருதாமல், சேவைத் துறை என்ற அடிப்படையில் இதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்கள், மின்சார வாரியத்துக்கு நிதி வழங்குவது போல, போக்குவரத்துத் துறைக்கும் கொள்கை ரீதியாக நிதியை வழங்க வேண்டும். இதற்கான அரசாணையை ஏற்கெனவே தமிழக அரசு வெளியிட்டது.
எனவே, வருகிற பட்ஜெட்டில் நிதியை ஒதுக்க வேண்டும். வருகிற 27-ஆம் தேதி தமிழக அரசு, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளது. இதில் நல்ல தீா்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்றாா் அவா்.
அப்போது, சிஐடியூ மாவட்டச் செயலா் பி.என்.தேவா, மாவட்ட துணைத் தலைவா் ஜி.வேலுச்சாமி ஆகியோா் உடனிருந்தனா்.
தீா்மானங்கள்
முன்னதாக, அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியூவின் 27-ஆவது ஆண்டுப் பேரவை கூட்டம் மண்டலத் தலைவா் ஏ. சுந்தரராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்
போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும். தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதைக் கைவிட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் சுமாா் 25,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் 25 சதவீத காலிப் பணியிடங்களை நிரப்ப மட்டுமே அரசாணை வெளிடப்பட்டது. எனவே, நிரந்தரப் பணியாளா்கள் மூலம் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை காலதாமதமின்றி பேசி முடிக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு 105 மாதங்களாக மறுக்கப்பட்டது. இதை உடனே வழங்க வேண்டும். தொழிலாளா் நலனுக்கு எதிரான 321 முதல் 328 வரையிலான அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிா்வாகிகள் தோ்வு: அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ விருதுநகா் மண்டலத் தலைவா் ஜி. திருப்பதி, பொதுச் செயலா் எம். வெள்ளத்துரை, பொருளாளா் ச. திருப்பதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இதேபோல, சங்கச் செயலா்கள், உதவித் தலைவா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.