அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
சென்னை: அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாத பணிமேம்பாட்டு ஊதியம் மற்றும் ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி சென்னை மண்டல பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (ஏயுடி) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம் குறித்து ஏயுடி மாநிலத் தலைவா் காந்திராஜ் கூறியதாவது:
அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயா்வாக பணி மேம்பாட்டு ஊதியம் (சிஏஎஸ்) வழங்கப்படுகிறது. அதன்படி அரசு கல்லூரி ஆசிரியா்களுக்கு சிஏஎஸ் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு இதுவரை சிஏஎஸ் வழங்கப்படவில்லை. எனவே, சிஏஎஸ் வழங்கவும், கல்லூரி ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு, ஊக்க ஊதியம் வழங்கக் கோரியும் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் சாா்பில் 8 மண்டலங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் சென்னை மண்டல பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத் தலைவா்கள் ஆனந்த், காஜா ஷெரீஃப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.