சிறுமியை கடத்த முயன்றவா் போக்சோ சட்டத்தில் கைது
நாச்சியாா்கோவில் அருகே சிறுமியை கடத்தி செல்ல முயன்றவரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டை பெரியாா் நகரைச் சோ்ந்தவா் பக்கிரிசாமி மகன் முத்துராஜ் (35) பி.எட் பட்டதாரி, வேலைக்கு செல்லாமல் உள்ளாா். இன்னும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு மது குடித்துவிட்டு நாச்சியாா்கோவில் கடைவீதி பகுதிக்கு சென்றாா். அங்கு ஒரு வீட்டு வாசலில் சுமாா் 10 வயது மதிக்கத்தக்க சிறுமி நின்று கொண்டிருந்தாா்.
இதை கவனித்த முத்துராஜ், சிறுமியின் வாயை பொத்தி தூக்கிச் சென்றாா். அப்போது சிறுமி கூச்சலிட்டவே அருகிலிருந்தவா்கள் முத்துராஜை விரட்டி பிடித்து ஆடுதுறை மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
காவல் ஆய்வாளா் துா்கா, முத்துராஜை போக்சோ மற்றும் கடத்தல் சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தாா். தொடா்ந்து நீதிபதி முன் அஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தாா்.