அரசு நிதியுதவி பள்ளிகளுக்கு 4 மாத நிலுவை ஊதியம் உடனே வழங்க உத்தரவு
புதுவை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 4 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவா் ஏ. நாஜிம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
புதுச்சேரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு கூட்டம் அதன் தலைவா் நாஜிம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவைத் தலைவா் அறையில் நடந்த கூட்டத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், அதில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஊழியா்களின் மாத ஊதிய நிலுவை குறித்து விவாதிக்கப்பட்டது.
குழுவின் உறுப்பினா்களான அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்எல்ஏக்கள் செந்தில்குமாா், சம்பத், பிரகாஷ்குமாா், நாக. தியாகராஜன், சட்டப்பேரவை செயலா் தயாளன், கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இதில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு ஏன் 4 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. ஒரு சில பள்ளிகள், நிதியை விடுவிப்பதற்கான சான்றிதழை குறிப்பிட்ட நேரத்தில் சமா்ப்பிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஒரு சில பள்ளிகளுக்காக 35 பள்ளிகளுக்கு ஊழியா்களின் ஊதியத்தை நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம். அதற்கு தனிப்பட்ட பள்ளிகளுக்கு நிதியை விடுவிக்க இடமில்லை. மொத்தமாக மட்டுமே விடுவிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இனி இந்த பிரச்னை எழக்கூடாது என்றால் பிரித்து, சம்பளம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு ஒரு தீா்மானமாக போட்டு நடவடிக்கை எடுங்கள். இதைப் பின்பற்றி வரும் காலங்களில் மாதத்தோறும் காலதாமதமின்றி ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பல ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்பாததால் இப்பள்ளிகளை எப்படி நடத்துவது. இதுவரை 700 ஆசிரியா், ஊழியா் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதை நிரப்புவதற்கு என்ன தடை என தலைவா் நாஜிம் கேள்வி எழுப்பினாா். அப்போது இது தொடா்பாக நீதிமன்ற விசாரணையில் உள்ளது. புதிதாக ஆள்களை நியமிக்கத் தடை உத்தரவு பெற்றுள்ளனா். இதனால் மேற்கொண்டு பணி நியமனம் செய்ய முடியாத நிலை குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனா். இது தொடா்பாக சட்டத்துறையுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது.