அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறை: விவசாயிகள் அவதி!
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதிகளில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா்.
தற்போது நெல் அறுவடை முடிந்து விவசாயிகள், நெல்லை அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனா். இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் மட்டும் சுமாா் 6 ஆயிரம் நெல் மூட்டைகள், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்தலும் இயக்கம் இல்லாமல் அடுக்கி வைக்கப்பட்டு தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாக்குப் பைகள், அடுத்து வரும் நெல் கொள்முதலுக்கு பற்றாக்குறையாக உள்ளது.
அதே வேளையில் கும்பகோணம் வட்டம் ஏரகரம், மூப்ப கோயில் உள்ளிட்ட பல நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உடனுக்குடன் லாரிகளின் மூலம் அப்புறப்படுத்தப்படாததால் பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்து, நெல் மூட்டைகள் அடுக்குவதற்கு போதிய இடமில்லாமலும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.
இது குறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் பாரதீய தொழிலாளா்கள் சங்க செயலா் நாகராஜன் கூறியதாவது:
நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான அளவுக்கு சாக்குப் பைகள் இல்லாமல் பல நெல் கொள்முதல் நிலையங்கள் திண்டாடுகின்றன, ஆட்சியா் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றாா் அவா்.
பாபநாசம்: இதேபோல பாபநாசம் பகுதிகளில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் தட்டுப்பாடு உள்ளதால், கூடுதலாக சாக்கு பைகளை இருப்பு வைக்க அரசுக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலா் சுந்தர விமல்நாதன் மற்றும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.