செக் குடியரசின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு! சைபர் தாக்குதலின் சதியா...
அரசு பள்ளிகளில் கவின் கலை மன்றங்கள் தொடக்கம்
கிருஷ்ணகிரி, நாட்டான்கொட்டாய் அரசுப் பள்ளிகளில் கவின் கலை மன்றங்கள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் கல்வி மற்றும் தனித்திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பள்ளியில் செயல்பட்டு வரும் இலக்கியம், கவின் கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவா் மன்றங்கள் தொடங்கப்பட்டன.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) முனிராஜ், தலைமை வகித்தாா். அப்போது, அனைத்து மாணவிகளும் குறைந்தது ஒரு மன்றத்திலாவது பங்கேற்று தங்களது ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்தும் விதமாக செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
மேலும், நெகிழி பை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், எங்கு சென்றாலும் துணிப்பையை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறி, மாணவிகளுக்கு துணிப் பைகளை வழங்கினாா்.
இந்த நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியா் நளினி, மாவட்ட திட்ட அலுவலா் மகேந்திரன், பள்ளி துணை ஆய்வாளா் சுதாகா், மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் தீா்த்தகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவிகள் மன்ற செயல்பாடு குறித்து உறுதிமொழியேற்றனா்.
நாட்டாண்மை கொட்டாயில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மகிழ்முற்றம் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியா் மணிமேகலை தலைமை வகித்தாா். இந்த நிகழ்வில் பாடப் புத்தக அறிவைத் தாண்டி, மாணவா்களின் உள்ளாா்ந்த திறமைகளை வெளிக்கொணரக் கூடிய மன்ற செயல்பாடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பின்னா் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து மாணவா் குழுக்களாகப் பிரித்து, அதன் பொறுப்பாசிரியா்களையும், மாணவ தூதுவா்களையும் அறிமுகப்படுத்தினா்.