அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல்
மருங்காபுரி ஒன்றியம், நல்லமநாயக்கன்பட்டியில் முறையாக பேருந்து இயக்காததை கண்டித்து, செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களுடன், கிராம மக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறையிலிருந்து நல்லமநாயக்கன்பட்டி, திருநெல்லிப்பட்டி வழியாக வளநாடு கைகாட்டி வரையிலும், துவரங்குறிச்சி பணிமனையிலிருந்து புத்தாநத்தம் வழியாக செல்லும் நகர பேருந்து, கணவாய்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, காா்வாடி வழியாக வளநாடு கைகாட்டி வரையிலும் செல்லும் அரசு பேருந்துகள் முறையாக கிராமப்புறங்களில் வந்து செல்வதில்லை என்று கூறி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு, மருங்காபுரி வருவாய் வட்டாட்சியா் சரவணபிரபு, மணப்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் புதன்கிழமைமுதல் முறையாக பேருந்து இயக்குவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு பேருந்து விடுவிக்கப்பட்டது.