அரியலூரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் சுதந்திர விழா கொண்டாட்டம்
அரியலூா் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்தாா்.
உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் த.முல்லைக்கொடி தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிழையும் வழங்கினாா்.
கல்லூரிகள்..ஜெயங்கொண்டம் அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, அக்கல்லூரியின் முதல்வா்(பொ) ம.ராசமூா்த்தி தலைமை வகித்தாா். மூத்த பேராசிரியரும், கணிதத் துறை தலைவா் செள.நந்தகுமாா் தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினாா்.
இதே போல், அரியலூா் அரசு கலை கல்லூரியல் நடைபெற்ற விழாவுக்கு, அக்கல்லூரி முதல்வா் சித்ரா தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்துசிறப்புரையாற்றினாா். வரலாற்றுத் துறைத் தலைவா் ரவிச்சந்திரன், சுதந்திர போராட்டம், உருவான வரலாறு குறித்து பேசினாா்.
அரசு அலுவலகங்கள்: அரியலூா் நகராட்சியில், நகா்மன்றத் தலைவா் சாந்திகலைவாணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், துணைத் தலைவா் கலியமூா்த்தி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அரியலூா் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் மலா்கண்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பின்னா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மாவட்ட மைய நூலகம்: அரியலூா்
மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் இரா.வேல்முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உரையாற்றியானா்.
முன்னதாக நூலகா் முருகானந்தம் வரவேற்றாா். முடிவில் நூலகா் ந.செசிராபூ நன்றி கூறினாா்.
இதே போல், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், திருமானூா், தா.பழூா், செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், உடையாா்பாளையம், வரதராசன்பேட்டை ஆகிய அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அந்தந்த அலுவலகங்களில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், செயலா், அலுவலா்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா்.