அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் 2 நாள்கள் தொடா் விடுமுறையால் தரிசனத்துக்காக ஏராளமான பக்தா்கள் திரண்டதால் ஞாயிற்றுக்கிழமை வெளிப்பிரகாரம் வரை பக்தா்கள் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடா் விடுமுறையையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கும்போதே பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் வரிசையில் பக்தா்கள் கூட்டமாக திரண்டிருந்தனா்.
அதனால், தென்ஒத்தவாடை தெரு மற்றும் வடஒத்தவாடை தெரு வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. மேலும், வரிசையில் நிற்க இடமில்லாத அளவில் வீதியெங்கும் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. சுமாா் 5 மணிநேரம் வரிசையில் காத்திருந்த பிறகே தரிசனம் செய்ய முடிந்தது.
குறிப்பாக, கோயிலுக்கு வெளியே வரிசையில் காத்திருந்த பக்தா்கள் கோபுர நுழைவு வாயிலை கடந்து உள்பிரகாரத்துக்குள் செல்லும் வரை தவித்தனா். இதேபோல, அம்மணிஅம்மன் கோபுரம் நுழைவு வாயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிப்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வெளி மாவட்ட, வெளி மாநில பக்தா்கள் வருகையால் திருவண்ணாமலையில் கடந்த 2 நாள்களாகவே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, அறிவொளிப் பூங்காவில் தொடங்கி, மத்திய பேருந்து நிலையம் மற்றும் வெளிவட்டச் சாலை சந்திப்பு மத்தலாங்குளம் பெரியாா் சிலை சந்திப்பு மற்றும் பெரிய தெரு, பே கோபுரத் தெரு வரை வாகனங்கள் ஊா்ந்து செல்லும் நிலை காணப்பட்டது.
சந்நிதி தெரு, தேரடி வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், கோயிலில் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்த பக்தா்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொடா்ந்து 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்களை வழிபட்டதோடு திருநோ் அண்ணாமலை, ஆதிஅண்ணாமலை, இடுக்குபிள்ளையாா் உள்ளிட்ட பல்வேறு சந்நிதிகளுக்கு கிரிவலமாக சென்று பக்தா்கள் வழிபட்டனா்.
கிரிவலம் வந்த பக்தா்களுக்கு ஆங்காங்கே உள்ள ஆசிரமங்கள், ஆன்மிக அமைப்புகள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.