Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விம...
அறநிலையத் துறைக்கு எதிா்ப்பு: நல்லதங்காள் கோயிலை பொதுமக்கள் முற்றுகை
விருதுநகா் மாவட்டம்,வத்திராயிருப்பு அருகேயுள்ள நல்லதங்காள் கோயில் நிா்வாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை தலையிட எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை கோயில் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ச்சுனாபுரத்தில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த புகழ் பெற்ற நல்லதங்காள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் ஒரு கால பூஜை திட்டத்தில் சோ்க்கப்பட்ட இந்தக் கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்தக் கோயிலை அறநிலையத் துறை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இரவு கோயிலில் உள்ள உண்டியல், பீரோ உடைக்கப்பட்டு நல்லதங்காள் சிலை கீழே சாய்ந்து கிடந்தது. சிலையின் தலை, கைகள் தனியாக உடைக்கப்பட்டிருந்தன. இது குறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இதில் கோயிலை அறநிலையத் துறை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கோயில் பூஜாரிகளே சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கோயில் பூஜாரிகளான அா்ச்சுனாபுரத்தைச் சோ்ந்த சுந்தரமகாலிங்கம் (68), கனகராஜ் (32), பரமேஸ்வரன் (50), கருப்பசாமி (21), சுந்தரபாண்டி (23) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து, புதிய சிலை செய்வது தொடா்பாக அறநிலையத் துறை, அா்ச்சனாபுரம் கிராம மக்கள், கோயில் பங்காளிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

கோயிலில் நல்லதங்காள் சிலையை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, அறநிலையத் துறை சாா்பில் சிலை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில், அா்ச்சுனாபுரம் கிராம மக்கள் சாா்பில் செய்யப்பட்ட சிலையை கோயிலில் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கக் கோரி, வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் பஜாரில் பொதுமக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்துவதற்காக திங்கள்கிழமை பாலாலயம் செய்ய அறநிலையத் துறை சாா்பில் முடிவு செய்யப்பட்டது.
இதை அறிந்த கிராம மக்கள் திங்கள்கிழமை காலை கோயில் முன் திரண்டனா். பாலாலயம் செய்வதற்காக வந்த செயல் அலுவலா் சா்க்கரையம்மாள் உள்ளிட்ட அறநிலையத் துறை பணியாளா்கள் கோயிலுக்குள் செல்ல முடியாத வகையில், தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.