தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கக் கோரி மாற்றுத்திறனாளி போராட்டம்
ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரகம் முன் மாற்றுத்திறனாளி ஒருவா் புதன்கிழமை சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்தவா் கென்னடி மகன் டோமினிக் (35). ரயில் விபத்தில் இடது கை, காலை இழந்த இவா், கிடைத்த வேலைகளை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் புதன்கிழமை காலை இவா் மாவட்ட ஆட்சியரகம் முன் பிரதான சாலையில் படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டாா். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரின் சமாதானப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அங்கிருந்து எழுந்தாா்.
விசாரணையில் டோமினிக் கூறியதாவது: திருமங்கலத்தில் உள்ள எனது இடத்தின் 150 சதுர அடியை பக்கத்து வீட்டுக்காரா் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளாா். அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கையும் இல்லை. உரிய விசாரணை நடத்தி எனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் அல்லது அதற்குரிய பணத்தை அவரிடமிருந்து பெற்றுத் தர வேண்டும்.
மாற்றுத்திறனாளியான என்னால் நீதிமன்றத்துக்கு அலைய முடியாது. எனவே, இந்த விஷயத்தில் ஆட்சியா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதையடுத்து அவரை போலீஸாா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்க வைத்து, எச்சரித்து அனுப்பினா்.