ஆசிய துப்பாக்கி சுடுதல்: 35 பேருடன் இந்திய அணி
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி, 35 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப், கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆகஸ்ட் 16 முதல் 30 வரை நடைபெறும் நிலையில், அதற்கான அணியை இந்திய ரைஃபிள் சங்கம் (என்ஆா்ஏஐ) அறிவித்தது.
மொத்தம் 15 பிரிவுகளில் நடைபெறவுள்ள போட்டியில் மனு பாக்கா் மட்டுமே மகளிருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் மற்றும் 25 மீட்டா் ஏா் பிஸ்டல் என இரு பிரிவுகளில் தனிநபா் பிரிவில் களம் காண்கிறாா்.
ருத்ராங்க்ஷ் பாட்டீல் (10 மீட்டா் ஏா் ரைஃபிள்), அஞ்சும் முட்கில் (50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ்), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமா் (50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ்), சௌரப் சௌதரி (10 மீட்டா் ஏா் பிஸ்டல்), கினான் செனாய் (டிராப்) ஆகியோா் இதில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
அத்துடன், ஈஷா சிங் (25 மீட்டா் பிஸ்டல்), மெஹுலி கோஷ் (ஏா் ரைஃபிள்), கிரண் அங்குஷ் ஜாதவ் (ஏா் ரைஃபிள்) உள்ளிட்டோரும் இணைந்துள்ளனா்.
இந்த ஆசிய சாம்பியன்ஷிப் தவிர, சீனாவில் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல், செப்டம்பா் - அக்டோபரில் கஜகஸ்தானில் நடைபெறவுள்ள ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை ஆகிய போட்டிகளுக்கான அணிகளையும் இந்திய ரைஃபிள் சங்கம் அறிவித்துள்ளது.