நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய...
`ஆடு ஜீவிதம்' போல கொடுமையை அனுபவித்த அப்பாராவ் - 20 ஆண்டுகளுக்குப்பின் உறவினரிடம் சேர்ந்த சம்பவம்
`ஆடு ஜீவிதம்' படத்தில் வருவதுபோல் 20 ஆண்டுகள் தமிழகத்தில் கொத்தடிமையாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த முதியவரை அரசுத்துறையினர் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஜனவரி 31 அன்று சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் தாலுகாவில் கொத்தடிமைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர்துறை உதவி ஆணையர் தலைமையில 'மாவட்ட கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புக்குழு'வினர் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், காளையார்கோயில் அருகே கடம்பங்குளத்தில் அண்ணாதுரை என்பவரிடம் ஆந்திரா மாநிலம் பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதான அப்பாராவ், கடந்த 20 ஆண்டுகளாகக் கொத்தடிமையாக இருந்து ஆடு மேய்த்துக்கொண்டிருப்பதை உறுதி செய்தனர். இந்தத் தகவல் உடனே சிவகங்கை லெக்டர் ஆஷா அஜீத்துக்குத் தெரிவிக்கப்பட, அவர் உத்தரவின்படி, உடனடியாக அப்பாராவ் மீட்கப்பட்டு, காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
சரியாக தன் ஊர், உறவினர் பெயர்களை சொல்லத் தெரியாத அப்பாராவ் கூறிய தகவல்களை வைத்து உறவினர்களை கண்டறிய ஆந்திரா மாநிலம் பார்வதிபுரம் மண்யம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குத் தகவல் சொல்லப்பட்டது. ஒரு மாதத்துக்குப் பின் அப்பாராவின் உறவினர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிவகங்கைக்கு வரவழைக்கப்பட்டு அப்பாராவ் ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட அரசு அலுவலர்களிடம் பேசியபோது "ஆந்திரா மாநிலம் ஒடிசா எல்லையில் உள்ள பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்பாராவ். 20 ஆண்டுகளுக்கு முன் கூலிவேலை செய்வதற்காக நண்பர்களுடன் ராமேஸ்வரம் ரயிலில் வந்துள்ளார். சிவகங்கை ரயில் நிலையத்தில் இறங்கி டீ சாப்பிட்டவர், ரயிலை தவற விட்டுள்ளார். எந்த விவரமும் தெரியாமல் சிவகங்கையில் தவித்து நின்றவரை கடம்பங்குளத்தைச் சேர்ந்த ஒருவர் வேலை தருவதாகக் கூறி அழைத்துச்சென்று ஆடு மேய்க்க வைத்துள்ளார்.

அதே ஊரில் 5 ஆண்டுகளுக்குப் பின் அண்ணாதுரை என்பவர் அப்பாராவை ஆடு மேய்க்க வைத்துள்ளார். சாப்பாடு மட்டும் போடுவதும், கூலி கொடுக்கவோ, அவரை ஊருக்கு அனுப்பவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்படியே காலம் ஓடியுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது அவரை மீட்டுக் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளோம். சரியான தகவல் இல்லாததால் அவரின் குடும்பத்தைக் கண்டு பிடிக்க ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. சிவகங்கை கலெக்டர் மூலம் பார்வதிபுரம் மண்யம் மாவட்ட கலெக்டரிடம் விவரம் கூறி அப்பாராவின் குடும்பத்தை ஒருவழியாகக் கண்டுபிடித்தோம்" என்றனர்.
மகள் சாயாம்மாள், மருமகன் தம்புதோரா சந்து ஆகியோர் அப்பாராவைப் பார்த்து அழுதுவிட்டனர். அதைவிடக் கொடுமை, அப்பாராவின் மனைவி 5 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார் என்ற தகவலைக் கேட்டு அப்பாராவ் வெடித்து அழுததுதான்.
கொத்தடிமையாக வைத்திருந்த அண்ணாதுரை மீது வழக்குப் பதிவு செயப்பட்டுள்ள நிலையில் அப்பாராவுக்கு அண்ணாதுரை கொடுக்கவேண்டிய 15 ஆண்டுகளுக்கான கூலி ரூ.8 லட்சத்தை சட்ட ரீதியாக பெற்று வழங்கவும் சிவகங்கை மாவட்ட கொத்தடிமை தொழிலாளர்முறை ஒழிப்புக் குழுவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

அதேநேரம், மாவட்ட கொத்தடிமை மறுவாழ்வு நிதி மற்றும் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதி, நன்கொடையாளர்கள் நிதி என மொத்தம் ரூ.3,30,000 நிவாரணத் தொகையை அவரின் வங்கிக் கணக்கில் செலுத்தி அதற்கான ஆணையினை கலெக்டர் ஆஷா அஜித் அப்பாராவிடம் வழங்கினார். அதன்பின்பு மகள், மருமகனுடன் அப்பாராவ் ஆந்திராவுக்கு கிளம்பினார்.