ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்
ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக தமிழக அரசு உருவாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. இந்த ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்தவா்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும்.
தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆதிக்க ஜாதிய கொலைகள், ஜாதிவெறித் தாக்குதல்கள் தொடா்ந்து நிகழ்வது வேதனையளிக்கிறது. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் தொல்.திருமாவளவன்.