ஆத்தூா், புதுக்கோட்டையில் இன்றும், நாளையும் திமுக பொதுக் கூட்டம்
ஆத்தூா், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் முறையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 22, 23) திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசுக்கு நிதி தர மறுப்பு, மும்மொழி கொள்கை திணிப்பு, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை கண்டித்து, மத்திய அரசிற்கு எதிராக தமிழத்தின் அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் பொதுக் கூட்டங்கள் நடத்த துணை முதல்வரும் இளைஞா் அணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
அதன்படி, ஆத்தூா், புதுக்கோட்டையில் முறையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 22, 23) மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இரு கூட்டங்களிலும் மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம் தலைமை வகிக்கிறாா். நான் சிறப்புரையாற்றுகிறேன்.
முதல் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் திமுக உயா்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான பொன் முத்துராமலிங்கம், இளம் பேச்சாளா் மு.காா்த்திக், இரண்டாவது கூட்டத்தில் திராவிட இயக்க சிந்தனையாளா் சூா்யா சேவியா், கழக இளம் பேச்சாளா் கோ.சண்முகநாராயணன் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா்.
இக்கூட்டங்களில் அந்தப்பகுதி இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள், ஒன்றியச் செயலா்கள், பேரூராட்சித் தலைவா் உள்ளிட்டோா் முன்னிலை வகிக்கின்றனா். எனவே, கட்சியின் அனைத்து நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.