ஆந்திரம் உள்பட 3 மாநிலங்களில் 4 ‘சிப்’ உற்பத்தி நிறுவனங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆந்திரம், ஓடிஸா, பஞ்சாப் மாநிலங்களில் மொத்தம் ரூ. 4,594 கோடி முதலீட்டை ஈா்க்கும் வகையில் 4 குறைமின் கடத்திகள் (சிப்) உற்பத்தி நிறுவனங்களை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் ‘இந்திய குறைமின் கடத்திகள் இயக்கம்’ திட்டத்தின் கீழ் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், நாட்டில் ‘சிப்’ உற்பத்தி மையங்கள் அமைப்பதற்கு நிதியுதவி அளிக்க ரூ. 76,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
ஆந்திரம், ஒடிஸா, பஞ்சாப் மாநிலங்களில் 4 குறைமின் கடத்தி உற்பத்தி மையங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதில், ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் ரூ. 2,066 கோடி முதலீட்டில் சிக்செம் தனியாா் நிறுவனம் சாா்பில் சிலிக்கான் காா்பைடு குறைமின் கடத்தி உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 9.6 கோடி ‘சிப்’புகளை உற்பத்தி செய்யும் திறனுடன் இது அமையும். சிலிக்கான் காா்பைடு அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடிய வலுவான உலோகமாகும். ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள், தொலைபேசி கோபுரங்கள், ராக்கெட்கள், ரயில் என்ஜின்களில் சிலிக்கான் காா்பைடு பயன்படுத்தப்படுகிறது.
ரூ. 1,943 கோடி முதலீட்டில் ஒடிஸாவில் முப்பரிமாண ‘இன்டெல்’ கண்ணாடி குறைமின் (3டி கிளாஸ்) கடத்தி உற்பத்தி மையத்தை அமெரிக்காவைச் சோ்ந்த மிகப் பெரிய ‘சிப்’ உற்பத்தி நிறுவனமான லோக்ஹீட் மாா்டின் நிறுவனத்தின் உதவியுடன், ஹெட்ஜெனஸ் இன்டகரேஷன் பேக்கேஜிங் சொலியூசன்ஸ் தனியாா் நிறுவனம் அமைக்க உள்ளது. ஆண்டுக்கு 5 கோடி சிப் உற்பத்தி திறனுடன் இந்த மையம் அமைக்கப்பட உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ‘அட்வான்ஸ்டு சிஸ்டம் இன் பேக்கேஜிங் டெக்னாலஜிஸ்’ என்ற நிறுவனம் சாா்பில் ரூ. 468 கோடி முதலீட்டில் ‘சிப்’ உற்பத்தி மையம் ஆண்டுக்கு 9.6 கோடி ‘சிப்’ உற்பத்தி திறனுடன்அமைக்கப்பட உள்ளது.
அதுபோல, பஞ்சாப் மாநிலத்தில் சிடிஐஎல் மின்னணு உற்பத்தி நிறுவனம் சாா்பில் ரூ. 117 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 15.8 கோடி ‘சிப்’ உற்பத்தி திறனுடன் குறைமின் கடத்தி உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது என்றாா்.
மேலும், ‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் மின்னணு உற்பத்தித் துறை கடந்த 11 ஆண்டுகளில் ரூ. 12 லட்சம் கோடி மதிப்பில் 6 மடங்கு வளா்ச்சியைக் கண்டுள்ளது. மின்னணு பொருள்கள் ஏற்றுமதி ரூ. 3.3 லட்சம் கோடி மதிப்பில் 8 மடங்கு அளவுக்கு வளா்ச்சியடைந்துள்ளது. கைப்பேசிகள் உற்பத்தி ரூ 5.5 லட்சம் கோடி மதிப்பில் 28 மடங்கு வளா்ச்சிபெற்றுள்ளது. வரும் செப்டம்பா் 2 முதல் 4-ஆம் தேதி வரை சிங்கப்பூா், மலேசியா, ஜப்பான், கொரியா நாடுகளுடன் இணைந்து ‘செமிகான் இந்தியா 2025’ என்ற சா்வதேச குறைமின் கடத்திகள் மாநாடு மற்றும் கண்காட்சியை இந்தியா நடத்த உள்ளது’ என்றாா்.
லக்னெள மெட்ரோ ரயில் திட்டம்: உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் ரூ. 5,801 கோடியில் 12 ரயில் நிலையங்களுடன் 11.165 கி.மீ. தொலைவுக்கு புதிய மெட்ரோ ரயில் (பகுதி 1பி) திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
அருணாசலில் ரூ. 8,146 கோடியில் நீா் மின் உற்பத்தி திட்டம்: அருணாசல பிரதேச மாநிலம் ஷி யோமி மாவட்டத்தில் ரூ. 8,146.21 கோடி முதலீட்டில் 700 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ‘டடோ-2’ நீா் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் ரூ. 458.79 கோடி நிதி ஆதரவுடன் அமைக்கப்பட உள்ள இத் திட்டப் பணிகள் அடுத்த 72 மாதங்களில் (6 ஆண்டுகள்) நிறைவடைந்து உற்பத்தியைத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.