ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
ராமஜெயம் கொலை வழக்கு: புழல் சிறையில் ரெளடியிடம் சிபிசிஐடி டிஐஜி விசாரணை
திருச்சியில் தமிழக அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் கே.என்.ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக, புழல் சிறையில் இருக்கும் ரெளடியிடம் சிபிசிஐடி டிஐஜி வி.வருண்குமாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.
அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரரும் திருச்சியைச் சோ்ந்த தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012 ஆண்டு கொலை செய்யப்பட்டாா். கொலை நிகழ்ந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையிலும் துப்பு துலங்காத நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணை மீண்டும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. அண்மையில் இந்த வழக்குத் தொடா்பாக டிஐஜி வி.வருண்குமாா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரெளடி சுடலைமுத்துவிடம் விசாரணை செய்தாா்.
இந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு, ராமஜெயம் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும் வகையில் திருச்சி சரகத்தில் இருந்த டிஐஜி வருண்குமாா், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டாா். இதைத் தொடா்ந்து டிஐஜி வருண்குமாா் தலைமையிலான சிபிசிஐடி போலீஸாா், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனைக் கைதி திருச்சி மண்ணச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த ரெளடி குணா என்ற குணசீலன் (44) என்பவரிடம் புதன்கிழமை விசாரணை செய்தனா்.
சந்தேகப்பட்டியலில் ரெளடி குணா: ராமஜெயம் கொலை வழக்கில் ரெளடி குணசீலன் என்ற குணா ஏற்கெனவே காவல் துறையின் சந்தேகப்பட்டியலில் இருந்து வந்தாா். திருச்சி மணிகண்டம் பகுதியில் கடந்த 2004-இல் 3 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2019-இல் நீதிமன்றம், குணசீலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
இந்த தண்டனையை முதலில் திருச்சி மத்திய சிறையில் அனுபவித்து வந்த குணசீலன், கடந்த 2021-இல் புழல் சிறைக்கு மாற்றப்பட்டாா். அவா் மீது 5 கொலை வழக்குகள் உள்பட 23 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.